பயணிகள் தண்டவாளத்தை கடப்பதை தடுக்க மத்திய ரெயில்வே நூதன முயற்சி
பயணிகள் தண்டவாளத்தை கடந்து செல்வதை தடுக்க மத்திய ரெயில்வே நூதன முயற்சியை மேற்கொண்டு உள்ளது.
மும்பை,
மும்பையில் மின்சார ரெயில் போக்குவரத்து மக்களின் உயிர் நாடியாக உள்ளது. சுமார் 80 லட்சம் மக்கள் இங்கு தினமும் மின்சார ரெயில்களில் பயணம் செய்கின்றனர். பயணிகள் பல நேரங்களில் ரெயில்களை பிடிக்க நடைமேம்பாலத்தை பயன்படுத்தாமல் தண்டவாளங்களை கடந்து செல்கின்றனர். அப்போது சிலர் விபத்துகளில் சிக்கி உயிரிழக்கின்றனர்.
இதை தடுப்பதற்காக ரெயில்வே நிர்வாகம் ரெயில்நிலையங்களில் தண்டவாளங்களுக்கு இடையே தடுப்புகளை வைத்து உள்ளது. எனினும் பயணிகள் தடுப்புகளை ஏறி குதித்து சென்றுவிடுகின்றனர்.
இந்தநிலையில் பயணிகள் தண்டவாள தடுப்புகளில் ஏறி குதிப்பதை தடுக்க மத்திய ரெயில்வே நூதன முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இதன்படி தொழிலாளர்கள் ரெயில்நிலைய தண்டவாள தடுப்புகளில் கிரீசை அடித்து வருகின்றனர். இந்த முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தடுப்பை தாண்டும் போது கிரீஸ் ஆடை மற்றும் கையில் படும் என்பதால் பயணிகள் தண்டவாள தடுப்பை தாண்டுவதில்லை என கூறுகின்றனர்.
இது குறித்து மத்திய ரெயில்வே மும்பைகோட்ட கூடுதல் மேலாளர் அசுதோஷ் குப்தா கூறுகையில், ‘‘தண்டவாளத்தை பயணிகள் கடந்து செல்வதை தடுக்க என்ன செய்யலாம் என யோசித்தேன். அப்போது தான் இந்த கிரீஸ் ஐடியா தோன்றியது. முதலில் தாதர் ரெயில்நிலையத்தில் 2, 3-வது பிளாட்பாரத்துக்கு இடையே உள்ள தடுப்பில் கிரீசை தடவினோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே தான் தற்போது எல்லா ரெயில்நிலைய தண்டவாள தடுப்புகளிலும் கிரீசை தடவி வருகிறோம்.
மும்பைவாசிகள் ஆடை விஷயத்தில் அதிக கவனமாக இருப்பார்கள். எனவே தான் இந்த திட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது’’ என்றார்.
கிரீஸ் திட்டம் தவிர பயணிகள் தண்டவாளத்தை கடந்து செல்வதை தடுக்க ரெயில்நிலையங்களில் அதிகளவில் நகரும் படிக்கட்டுகள் மற்றும் லிப்டு அமைத்தல், தண்டவாளம் ஓரம் தடுப்பு சுவர் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மத்திய ரெயில்வே செய்து வருவது குறிப்பிடத்தக்கது.