பொக்காபுரம் அருகே சிங்காரா வனப்பகுதியில் ஓய்வு எடுத்த புலி - கிராமமக்கள் அச்சம்

பொக்காபுரம் அருகே சிங்காரா வனப்பகுதியில் புலி ஒன்று நீண்ட நேரம் ஓய்வு எடுத்தது. இதனால் வனப்பகுதியையொட்டி வசித்து வரும் கிராமமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Update: 2019-07-23 23:00 GMT
மசினகுடி,

முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சிங்காரா வனப்பகுதியில் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைப்புலிகள், செந்நாய்கள், கரடிகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. முட்புதர்காடுகளும், புல்வெளிகளும் நிறைந்த இந்த வனப்பகுதியில் ஆயிரக்கணக்கான புள்ளி மான்கள், கடமான்கள், காட்டு பன்றிகள், குரைக்கும் மான் உள்ளிட்டவைகள் இருக்கின்றன. இந்த விலங்குகள் அனைத்தும் புலி, சிறுத்தைப்புலி போன்ற மாமிசங்களை சாப்பிட்டு வாழ கூடிய விலங்குகளுக்கு பிடித்தமான உணவு ஆகும்.

எனவே அதிக எண்ணிக்கையிலான புலிகள் சிங்காரா வனப்பகுதியில் சுற்றி திரிந்து வருகின்றன. குறிப்பாக ஆச்சக்கரை, கல்லல்லா, மருந்து குடோன், பொக்காபுரம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் அதிக புலிகள் வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் சிங்காரா பகுதியில் 4 புலிகள் ஒன்றாக சுற்றி திரிவதை வனத்துறை ஊழியர்கள் பார்த்து உள்ளனர்.

வனப்பகுதியில் உள்ள மான் உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாடும் புலிகள் சமீப காலங்களாக மசினகுடி, பொக்காபுரம் பகுதிகளில் இருந்து மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடு போன்ற கால்நடைகளையும் வேட்டையாடி வருகின்றன. மேலும் புலிகள் குடியிருப்பு பகுதிக்குள் வருவதும் அதிகரித்து வரு கிறது. இதனால் கால்நடை வளர்ப்பவர்கள் பீதியில் உள்ளனர்.

இந்த நிலையில் பொக்காபுரம் அருகில் உள்ள வனப்பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு புலி ஒன்று படுத்து ஓய்வு எடுத்ததை வனத்துறை ஊழியர்கள் மற்றும் கால்நடை மேய் பவர்கள் நேரடியாக கண்டுள்ளனர்.

அவர்களை கண்ட அந்த புலி சிறிது கூட அச்சப்படாமல் நீண்ட நேரமாக அமர்ந்து பார்த்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. நீண்ட ஓய்வுக்கு பின்னர் அந்த புலி அங்கிருந்து மெதுவாக எழுந்து நடந்து சென்றது. பொக்காபுரம் அருகே புலி நடமாட்டத்தால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்