கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தை வாடகை கார், வேன் ஓட்டுனர்கள் முற்றுகை

கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தை வாடகை கார், வேன் ஓட்டுனர்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2019-07-23 23:00 GMT
கோவில்பட்டி,

கோவில்பட்டி, எட்டயபுரம் வாடகை கார், வேன் ஓட்டுனர்கள் சங்கத்தினர் நேற்று கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர் நாகூர் கனியிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

அந்த மனுவில், சில தொழில் அதிபர்கள் சொந்த கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை வாடகைக்கு விடுவதால், வாடகை கார், வேன் ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதனால் அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து நாங்கள் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்தாலும், எங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே வாகனங்களுக்கு மாதாந்திர தவணைத்தொகை, சாலை வரி, தகுதிச்சான்று, காப்பீடு கட்டணம் போன்றவற்றுக்கு அதிக பணம் செலுத்தி சிரமப்படுகிறோம். எனவே வாடகை கார், வேன் ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்துக்கு இடையூறாக சொந்த வாகனங்களை வாடகைக்கு விடுகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

நடவடிக்கை

வாடகை கார், வேன் ஓட்டுனர்கள் சங்க நிர்வாகிகள் ரவீந்திரன், சக்திவேல், சாலை மாடசாமி, கண்ணன், முத்துராஜ், கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மனுவை பெற்று கொண்ட மோட்டார் வாகன ஆய்வாளர் நாகூர் கனி, இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்