வீர தீர செயல் புரிந்த குழந்தைகள் தேசிய விருது பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் ஜெயகாந்தன் தகவல்

வீர தீர செயல் புரிந்த குழந்தைகள் மற்றும் குழந்தைககளுக்காக சிறந்த சேவைகள் செய்தவர்கள் மத்திய அரசின் தேசிய விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-07-23 23:00 GMT
சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் புதிய கண்டுபிடிப்பு, கல்வி, விளையாட்டு, கலை மற்றும் பண்பாடு, சமூக சேவை ஆகிய துறைகளில் வீர தீர செயல் புரிந்த தனித்தகுதி படைத்த குழந்தைகளை அங்கீகரிக்கும் வகையில் பால சக்தி புரஷ்கார் என்னும் குழந்தைகளுக்கான பிரதம மந்திரி தேசிய குழந்தைகள் விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருது ரூ.1 லட்சத்திற்கான காசோலை, பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை புத்தகம் ஆகியவற்றைக் கொண்டதாகும்.

அத்துடன் குழந்தைகள் மேம்பாடு, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் நலம் போன்ற துறைகளில், குழந்தைகளுக்கான சேவைகளில் தலை சிறந்த பங்களிப்பு செய்த தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் விதமாக பால கல்யாண் புரஷ்கர் என்னும் தேசிய விருது வழங்கப்படுகிறது.

இதில் தனிப்பட்ட நபர்களுக்கான விருதிற்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலை, பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை வழங்கப்படும். நிறுவனங்களுக்கான விருதிற்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலை, பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை வழங்கப்படும். இந்த விருதுகள் பெறுவதற்கு குழந்தைகள், தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்கள் இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக சமர்ப்பிக்க வருகிற 31-ந் தேதி கடைசி நாளாகும். இணையதளம் மூலம் பெறப்படும் விண்ணப்பங்களில் அனைத்து தகுதிகள் பெற்ற விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு குடியரசு தினத்தையொட்டி முந்தைய வாரத்தில் டெல்லியில் குடியரசு தலைவரால் விருதுகள் வழங்கப் படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்