கொடைக்கானலில் டயர் வெடித்ததால் தறிக்கெட்டு ஓடிய கார் ஏரிக்குள் பாய்ந்தது

கொடைக்கானலில், டயர் வெடித்ததால் தறிகெட்டு ஓடிய கார் ஏரிக்குள் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-07-23 22:45 GMT

கொடைக்கானல்,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரில் உள்ள நட்சத்திர ஏரி சுமார் 4½ கி.மீ. சுற்றளவு கொண்டது. இந்த ஏரியை சுற்றியுள்ள சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் மதுரை திருநகரை சேர்ந்த பாண்டியராஜ் என்பவர் தனது நண்பர்களுடன் ஏரியை சுற்றி தனது காரில் வந்தார்.

அப்போது பிரையண்ட் பூங்கா எதிரில் உள்ள ஒரு வளைவில் திரும்பியபோது காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிக்கெட்டு ஓடியது. இதனையடுத்து ஏரியை சுற்றி அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலியை உடைத்து கொண்டு கார் ஏரிக்குள் பாய்ந்தது. இதில் கார் பலத்த சேதம் அடைந்தது. காரில் வந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.

அதிகாலை நேரம் என்பதால், அந்த வழியாக யாரும் வரவில்லை. இல்லையெனில் பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும். இதுகுறித்து தகவல் அறிந்த கொடைக்கானல் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பொன் குணசேகரன் தலைமையில் போலீசார் வந்து காரை அப்புறப்படுத்தினர்.

மேலும் நகராட்சி ஆணையாளர் முருகேசன் தலைமையில் அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சேதமடைந்த தடுப்பு வேலியை பார்வையிட்டனர். அப்போது காரில் வந்தவர்கள், சேதமடைந்த தடுப்பு வேலியை சீரமைத்து தருவதாக உறுதி அளித்தனர். இந்த விபத்து காரணமாக அதிகாலை நேரத்திலேயே கொடைக்கானல் ஏரிச்சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்