அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு ஜீரோ போக்குவரத்து வசதி செய்து கொடுத்தது ஏன்? சபாநாயகர் ரமேஷ்குமார் ஆவேசம்

அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு ஜீரோ போக்குவரத்து வசதி செய்து கொடுத்தது ஏன்? என்று சபாநாயகர் ரமேஷ் குமார் ஆவேசமாக கேட்டார்.

Update: 2019-07-22 23:46 GMT
பெங்களூரு, 

கர்நாடக சட்டசபையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் மீது ஜனதாதளம் (எஸ்) கட்சி உறுப்பினர் ஏ.டி.ராமசாமி பேசினார். அவர், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு ‘ஜீரோ‘ போக்குவரத்து வசதி செய்து கொடுத்தது சரியல்ல என்று கூறி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இதுகுறித்து போலீஸ் மந்திரி எம்.பி.பட்டீல் பதிலளிக்கையில், “அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து விதான சவுதாவுக்கு வந்தனர். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனருக்கு கவர்னர் உத்தரவிட்டார். அதன்படி அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. ‘ஜீரோ‘ போக்குவரத்து வசதி செய்து கொடுக்கப்படவில்லை. அவர்கள் வந்த வாகனம் எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து விதான சவுதாவுக்கு வர 40 நிமிடங்கள் ஆனது“ என்றார்.

இதனால் சபாநாயகர் ரமேஷ்குமார் கடும் ஆவேசத்தை வெளிப்படுத்தினார்.

அவர் பேசுகையில், “மந்திரி எம்.பி.பட்டீல் கூறிய பதில் திருப்திகரமாக இல்லை. இவ்வாறு கூற உங்களின் மனசாட்சி ஒப்புக்கொள்கிறதா?. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு ‘ஜீரோ‘ போக்குவரத்து வசதி கொடுத்ததை இந்த நாடே பார்த்தது. இனி வரும் காலங்களில் குற்றவாளிகளுக்கும் ‘ஜீரோ‘ போக்குவரத்து வசதி செய்து கொடுத்துவிடுங்கள். இந்த நிர்வாக அமைப்பு எங்கே சென்றுக் கொண்டிருக்கிறது“ என்றார்.

மேலும் செய்திகள்