குளோனிங் முறையில் ஏ.டி.எம். கார்டு தயாரித்து வங்கி பெண் ஊழியர் கணக்கில் ரூ.40 ஆயிரம் அபேஸ்

குளோனிங் முறையில் ஏ.டி.எம். கார்டு தயாரித்து வங்கி பெண் ஊழியர் கணக்கில் ரூ.40 ஆயிரம் அபேஸ் செய்த வெளிநாட்டுக்காரர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-07-22 21:54 GMT
மும்பை, 

மும்பையை சேர்ந்தவர் 30 வயது வங்கி பெண் ஊழியர் ஒருவரின் வங்கிக்கணக்கில் இருந்து சம்பவத்தன்று, ரூ.40 ஆயிரம் எடுக்கப்பட்டதாக அவரது செல்போனில் குறுந்தகவல் வந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், இதுபற்றி வங்கிக்கு தகவல் கொடுத்ததின்பேரில் அவரது ஏ.டி.எம் கார்டு முடக்கப்பட்டது. 

பின்னர் இதுகுறித்து அவர் பாந்திரா போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்ட ஏ.டி.எம். மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை பார்வையிட்டனர். இதில், அவரது வங்கிக்கணக்கில் இருந்து குளோனிங் முறையில் தயாரிக்கப்பட்ட ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி வெளிநாட்டுக்காரர் ஒருவர் பணத்தை எடுத்து இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

இந்தநிலையில் போலீசார் நேற்றுமுன்தினம் பாந்திரா மேற்கில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு வந்த அந்த வெளிநாட்டுக்காரரை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில், அவர் பல்கேரியா நாட்டை சேர்ந்த மிலன் இவனோ வாரனாஷ்கி(வயது44) என்பது தெரியவந்தது. இவர் சுற்றுலா விசாவில் மும்பை வந்து அந்தேரியில் தங்கியிருந்தது தெரியவந்தது. மேலும் போலீசார் அவரிடம் இருந்து குளோனிங் முறையில் தயாரிக்கப்பட்ட 15 போலி ஏ.டி.எம். கார்டுகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்