மூடப்பட்ட குவாரியை திறக்கக்கோரி மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம்

மூடப்பட்ட மணல் குவாரியை திறக்க கோரி மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2019-07-22 23:00 GMT
திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள். இதற்கு சங்கத்தின் மாவட்டத்தலைவர் சேகர் தலைமை தாங்கினார். திருவெறும்பூர் தாலுகா கீழ முல்லக்குடியில் செயல்பட்டு வந்த மணல் குவாரி திடீர் என மூடப்பட்டதால் ஆயிரக்கணக்கான மாட்டு வண்டி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்திற்கு வழி இன்றி அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அதனை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தோடு போடப்பட்ட ஒப்பந்தப்படி கொண்டயம்பேட்டை, அப்பாதுரை, லால்குடி, முருங்கப்பேட்டை, பெட்டவாத்தலை ஆகிய இடங்களிலும் மணல் குவாரி திறக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்தில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஏராளமானவர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

அதிகாரிகள் உறுதி

கோரிக்கைகளை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராமர் ஆகியோர் பேசினார்கள். சங்க நிர்வாகிகள் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் 2 நாட்களில் மணல் குவாரி திறக்கப்படும், ஆன்லைன் முறையில் மாட்டு வண்டிகளுக்கு மணல் வழங்கப்படும் என அளிக்கப்பட்ட உறுதியை தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்