ரூ.3 கோடி போதைப்பொருளை விழுங்கி கடத்தி வந்த வெளிநாட்டு பெண் மும்பை விமான நிலையத்தில் பிடிபட்டார்
மும்பை விமான நிலையத்தில் ரூ.3 கோடி போதைப்பொருளை விழுங்கி கடத்தி வந்த வெளிநாட்டு பெண் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
மும்பை சர்வதேச விமான நிலையத்தில் சம்பவத்தன்று பிரேசில் நாட்டில் இருந்து வந்த விமானம் ஒன்று தரை இறங்கியது. இந்த விமானத்தில் வந்து இறங்கிய வெனிசூலா நாட்டைசேர்ந்த கென்யா லாவட்டே என்ற பெண்ணை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை நடத்தினர்.
இதில் அவரதுஉடைமைகளில் எதுவும் இல்லாததால், பெண் அதிகாரிகள் அவரை தனிஅறைக்கு அழைத்து சென்று சோதனை போட்டனர். அப்போது அவரது பிறப்பு உறுப்பில் மறைத்து வைத்திருந்த கொகைன் என்ற போதைப்பொருளை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மேலும் அவரது வயிற்றுக்குள் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த வெளிநாட்டு பெண்ணை ஜே.ஜே.ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று 3 நாட்கள் சிகிச்சை அளித்து வயிற்றில் விழுங்கி வைத்திருந்த கேப்சூல் வடிவில் இருந்த கொகைன் என்ற போதைப்பொருளை வெளியில் எடுத்தனர். மொத்தம் அவரது வயிற்றில் இருந்து 35 கேப்சூல்கள் வெளியில் எடுக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அந்த பெண்ணை கைது செய்தனர். அவர் கடத்தி வந்த போதைப்பொருளின் மதிப்பு ரூ.3 கோடி ஆகும்.
இதுகுறித்து சகார் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெளிநாட்டு பெண்ணை கைது செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.