காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மூழ்கும் ‘டைட்டானிக்’ கப்பல் சுதிர் முங்கண்டிவார் விமர்சனம்
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மூழ்கும் ‘டைட்டானிக்’ கப்பல் போன்றது என சுதிர் முங்கண்டிவார் விமர்சித்துள்ளார்.
மும்பை,
மராட்டியத்தில் சட்டசபை தேர்தல் வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடந்த முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜனதா-சிவசேனா கூட்டணி வரும் சட்டசபை தேர்தலையும் எளிதில் கைப்பற்றிவிட முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளது.
இந்த நிலையில் நேற்று பா.ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பா.ஜனதா கட்சி செயல் தலைவர் ஜே.பி.நட்டா, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், கட்சியின் மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக அக்கட்சியின் மூத்த தலைவரும், நிதித்துறை மந்திரியுமான சுதிர் முங்கண்டிவார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஊழல் கரைப்படிந்த காங்கிரஸ் கட்சி நமது பாரத மாதாவிற்கு பல்வேறு வேதனைகளை அளித்தது. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தற்போது மூழ்கும் டைட்டானிக் கப்பல் போன்று உள்ளது. அதிலும் காங்கிரஸ் கட்சி தலைமையற்ற கட்சியாக உள்ளது. மராட்டியத்தை பொறுத்தவரை அக்கட்சி புதிய தலைவரையும், 4 செயல் தலைவர்களையும் நியமித்துள்ளது. இது அக்கட்சிக்கு ஒருபோதும் உதவப்போவதில்லை.
பா.ஜனதாவும் அதன் கூட்டணி கட்சிகளும் வரும் தேர்தலில் 220 இடங்களுக்கு மேல் வெற்றிபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மராட்டியத்தில் உள்ள 288 தொகுதிகளில் பா.ஜனதா 123 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.