குமாரபாளையம் அருகே கோவிலில் அன்னதானம் சாப்பிட்ட பெண் பரிதாப சாவு

குமாரபாளையம் அருகே விநாயகர் கோவிலில் அன்னதானம் சாப்பிட்ட பெண் பரிதாபமாக இறந்தார். 100-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2019-07-21 23:00 GMT
குமாரபாளையம்,

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே எதிர்மேடு கிராமம் உள்ளது. இங்குள்ள விநாயகர் கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து தினமும் கோவிலில் மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. நேற்று 12-வது நாள் மண்டல பூஜை நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமாக இட்லி வழங்கப்பட்டது.

இதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் பக்தர்கள் சிலருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பிற பக்தர்கள், மயக்கம் அடைந்தவர்களை மீட்டு குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 60-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அன்னதானம் சாப்பிட்ட குமாரபாளையம் அருகே அண்ணாநகர் பகுதியை சேர்ந்த கோபாலன் என்பவரின் மனைவி தனா (வயது 65) என்பவர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், தனா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி படைவீடு மற்றும் கல்லங்காட்டுவலசு ஆரம்ப சுகாதார குழு மூலம் எதிர்மேடு கிராமத்தில் மருத்துவ முகாம் நடத்த உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து கல்லங்காட்டுவலசு டாக்டர் செந்தாமரை தலைமையில் மருத்துவ குழுவினர் கோவில் வளாகம், அருகில் உள்ள ரேஷன்கடை உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டு அன்னதானம் சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். இதற்கிடையே பாதிக்கப்பட்டவர்களை அமைச்சர் தங்கமணி நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இட்லிக்கு பரிமாறப்பட்ட சட்னியில் பல்லி விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குமாரபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்