பொள்ளாச்சி அருகே பரபரப்பு தண்டவாளத்தில் கற்களை போட்டு அமர்ந்து மது குடித்த வடமாநில தொழிலாளர்கள் 3 பேர் கைது சென்னை ரெயில் அதிர்ஷ்டவசமாக தப்பியது
பொள்ளாச்சியில் தண்டவாளத்தில் கற்களை போட்டு அமர்ந்து மது குடித்த வடமாநில வாலிபர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் சென்னை ரெயில் அதிர்ஷ்டவசமாக தப்பியது.
பொள்ளாச்சி,
கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சி வழியாக சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் பொள்ளாச்சியில் இருந்து 20 பெட்டிகளுடன் மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு ரெயில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. ரெயிலில் சுமார் 500 பயணிகள் இருந்தனர். அப்போது மாக்கினாம்பட்டி மின் நகர் பகுதியில் வந்த போது, தண்டவாளத்தில் பயங்கர சத்தம் கேட்டது. இதையடுத்து ரெயிலை டிரைவர் நிறுத்தினார். பின்னர் அவர் ரெயிலில் இருந்து இறங்கி வந்து பார்த்த போது, கற்கள் சிதறி கிடந்தன. மேலும் பீர், மது பாட்டில்கள் உடைந்து கிடந்தன.
இதுகுறித்து டிரைவர் மதுரை ரெயில்வே கோட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதை தொடர்ந்து ரெயில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது. இதற்கிடையில் ரெயில்வே அதிகாரிகள், பழனி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து ரெயில்வே சூப்பிரண்டு சரோஜ்குமார் தாகூர் உத்தரவின் பேரில் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) சுப்பிரமணியம் தலைமையில் இன்ஸ்பெக்டர் கீதாதேவி மற்றும் போலீசார் பொள்ளாச்சிக்கு விரைந்து வந்தனர்.
மேலும் மதுரையில் இருந்து குற்றப்பிரிவு போலீசாரும், மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டன. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தண்டவாள பகுதியில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். மேலும் தண்டவாளத்தில் கற்கள், மதுபாட்டில்கள் சிதறி கிடந்ததால் குடிபோதையில் ரெயிலை கவிழ்க்க சதி நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இரவு நேரமாகி விட்டதால் நேற்று அதிகாலை முதல் 10-க்கும் மேற்பட்ட போலீசார் தண்டவாள பகுதியில் வசிக்கும் மக்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் நேற்று முன்தினம் மாலை சிலர் தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்ததாக தெரிவித்தனர். இதையடுத்து நேற்று மாலை சாதாரண உடையில் குற்றப்பிரிவு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வடமாநில வாலிபர்கள் கூட்டமாக வந்து கொண்டிருந்தனர். சந்தேகமடைந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் பீகார் மாநிலத்தை சேர்ந்த கோட்டாலால் ராம்(வயது 39), லால்ஜிமாஜி (36), நாகேந்திரமாஜி (33) ஆகியோர் என்பதும், மாக்கினாம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆயில் நிறுவனத்தில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. மேலும் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தியதும், குடிபோதையில் தண்டவாளத்தில் கற்களை வைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து பழனி ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். தகவல் தெரிந்த 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்த ரெயில்வே போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர். தண்டவாளத்தில் கற்களை வைத்ததாக 3 பேர் கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ரெயில்வே போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
கைதான பீகாரை சேர்ந்த 3 பேரும் சின்னாம்பாளையம் டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடிப்பது வழக்கம். மதுக்கடையையொட்டி உள்ள பாரில் மது குடிக்க கூடுதல் செலவு அதிகம் ஆவதால், 3 பேரும் தோட்டத்து பகுதியில் வைத்து மது குடித்து வந்தனர். இந்த நிலையில் தோட்டத்துக்காரர் திட்டியதால் தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்து உள்ளனர். அப்போது தண்டவாளத்தில் உட்கார சிரமமாக இருப்பதாக கூறி கற்களை எடுத்து தண்டவாளத்தில் வைத்துள்ளனர். பின்னர் மது அருந்தி விட்டு போதையில் கற்களை அப்படியே போட்டு விட்டு சென்று விட்டனர்.
இந்த நிலையில் பாலக்காட்டில் இருந்து சென்னைக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் மாக்கினாம்பட்டி மின் நகர் பகுதியில் வந்த போது கற்கள் மீது மோதி உள்ளது. தண்டவாளத்தில் வைத்தது ஓடை கற்கள் என்பதால் சுக்குநூறாக நொறுங்கி விட்டது. இதே பாறை கற்கள் போன்ற கடினமான கற்களை வைத்திருந்தால் ரெயில் திடீரென்று கவிழ்ந்து இருக்கும். கற்கள் நொறுங்கியதால் அதிர்ஷ்டவசமாக சென்னை ரெயில் தப்பி விட்டது. 500 பயணிகளும் உயிர் தப்பினர். கைதான 3 பேர் மீது மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் கற்களை வைத்ததாக வழக்குபதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் பழனி ஜே.எம். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.