தம்மம்பட்டி அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து முதியவர் சாவு
தம்மம்பட்டி அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் முதியவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பிய போது நடந்ததால் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தம்மம்பட்டி,
ஆத்தூர் அருகே உள்ள தென்னங்குடிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவர் நேற்று உடல் நலக்குறைவால் இறந்தார். இவருடைய துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தம்மம்பட்டி அருகே உள்ள செந்தாரப்பட்டி பகுதியை சேர்ந்த மருதமுத்து (வயது 65) உள்பட 40 பேர் நேற்று மதியம் சரக்கு ஆட்டோவில் சென்றனர். இந்த ஆட்டோவை செந்தாரப்பட்டியை சேர்ந்த டிரைவர் சரத்குமார் என்பவர் ஓட்டினார். இதைத்தொடர்ந்து அவர்கள் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பின்னர் அவர்கள் மீண்டும் ஊருக்கு சரக்கு ஆட்டோவில் தம்மம்பட்டி அருகே மேல்தோம்பை பகுதி வழியாக திரும்பிக்கொண்டு இருந்தனர். அப்போது ஒரு வளைவில் திரும்பிய போது அதிக பாரத்தால் ஆட்டோ திடீரென நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து ஆட்டோவில் இருந்தவர்கள் அய்யோ, அம்மா காப்பாற்றுங்கள் என அலறினர். இதில் மருதமுத்து மற்றும் கமலா, வசந்தா, மணிமேகலை உள்பட 32 பேர் காயமடைந்தனர்.
இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் தம்மம்பட்டி போலீசாருக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் மருதமுத்து மட்டும் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மருதமுத்து பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக தம்மம்பட்டி போலீசார் டிரைவர் சரத்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.