கல்யாண் ஓட்டலில் இளம்பெண்ணை கொன்று காதலன் தூக்குப்போட்டு தற்கொலை

கல்யாண் ஓட்டலில் இளம்பெண்ணை கொன்று காதலன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-07-20 22:30 GMT
அம்பர்நாத்,

தானே மாவட்டம் கல்யாண் அருகே உள்ள ஒரு தனியார் ஓட்டலுக்கு சம்பவத்தன்று வாலிபர் மற்றும் இளம்பெண் வந்தனர். அவர்கள் அங்கு அறை எடுத்து தங்கினர். இந்தநிலையில், அவர்கள் தங்கியிருந்த அறை வெகுநேரமாக திறக்கப்படாமல் இருந்தது.

இதனை கண்ட ஓட்டல் ஊழியர் கதவை தட்டி உள்ளார். உள்ளே இருந்து எந்தவொரு பதிலும் வராததால் சந்தேகம் அடைந்த ஊழியர் சம்பவம் குறித்து மேலாளருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் மேலாளர் அங்கு வந்து கதவை உடைத்து பார்த்தார். அப்போது வாலிபர் மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடியும், இளம்பெண் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையிலும் பிணமாக கிடந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுபற்றி போலீசில் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் அங்கு சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், தூக்கில் தொங்கிய வாலிபர் உத்தரபிரதேச மாநிலம் ஆஜாம்காட்டை சேர்ந்த அருண் குமார் (வயது20) என்பதும், இளம்பெண் காட்கோபரை சேர்ந்த ராதே ஷியாம் (19) என்பதும் தெரியவந்தது.

இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்தநிலையில் ராதேஷியாமிற்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் ஏற்பாடு செய்துள்ளனர். இதற்கு ராதேஷியாமும் சம்மதித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அருண் குமார், இளம்பெண்ணை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி சம்பவத்தன்று மும்பை வந்த அவர் ராதேஷியாமை பேசவேண்டும் என கல்யாணில் உள்ள ஓட்டலுக்கு அழைத்தார். இதையடுத்து ஓட்டலுக்கு வந்த ராதேஷியாமை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அவரும் துக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்