கடலூர் துறைமுகத்திற்கு மீன்கள் வரத்து அதிகரிப்பு

கடலூர் துறைமுகத்திற்கு மீன்கள் வரத்து நேற்று அதிகரித்து காணப்பட்டது.

Update: 2019-07-20 22:30 GMT
கடலூர் முதுநகர்,

கடலூர் துறைமுகத்தில் இருந்து சிங்காரத்தோப்பு, தேவனாம்பட்டினம், சோனாங்குப்பம், அக்கரைக்கோரி உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் 100-க்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம். அந்த வகையில் நேற்றும் வழக்கம் போல் மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்தனர். அப்போது மீனவர்களின் வலைகளில் மத்தி, கவளை, சூரை போன்ற வகையான மீன்கள் அதிகளவில் சிக்கி இருந்தன.

இவைகளை தவிர, சில மீனவர்களின் வலைகளில் கோட்டான் திருக்கை வகை மீன்களும் அதிகமாக சிக்கி இருந்தன. ஒரு கோட்டான் திருக்கை மீன் சுமார் 120 கிலோ முதல் 180 கிலோ வரைக்கும் எடை கொண்டதாக இருந்தது. நேற்று ஒரே நாளில் சுமார் 40 டன்னுக்கு மேல் இந்த வகை மீன்கள் சிக்கி இருந்தது. ஒரு கிலோ கோட்டான் திருக்கை மீன் ரூ.50 முதல் 80 வரைக்கும் விலைபோனது. இதை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

இதேபோல் மத்தி, சூரை, கவளை மீன்கள் சுமார் 100 டன் அளவிற்கு வந்திருந் தது. வழக்கமாக ஒரு கிலோ ரூ.50-க்கு விலைபோகும் மத்தி மீன்கள் நேற்று ரூ. 100 முதல் ரூ. 150 வரைக்கும் விலை போனது. அதேபோல் கவளை மீன்கள் ரூ.80 முதல் 90 வரைக்கும், சூரை மீன்கள் ரூ.80-க்கும் விற்பனையானது. இங்கு விற்பனை செய்யப்பட்ட மீன்களை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு லாரிகளில் ஏற்றி அனுப்பி வைத்தனர். மீன்கள் வரத்து அதிகமாக இருந்ததால் கடலூர் துறைமுகம் நேற்று பரபரப்புடன் இயங்கியது.

மேலும் செய்திகள்