செஞ்சி பகுதியில் இடி, மின்னலுடன் மழை 30 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

செஞ்சி பகுதியில் இடி,மி்ன்னலுடன் மழை பெய்தது. 30 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

Update: 2019-07-20 23:15 GMT
செஞ்சி, 

செஞ்சியில் நேற்று முன்தினம் மாலையில் வானில் மேகக்கூட்டங்கள் திரண்டு, குளிர்ந்த காற்று வீசியது. இதனை தொடர்ந்து இரவு 8 மணி அளவில் இடி, மின்னலுடன் மழை பெய்யத்தொடங்கியது. பலத்த காற்றுடன் 45 நிமிடங்கள் மழை கொட்டித்தீர்த்தது. அதன்பிறகு இரவு 11 மணி வரை தூறிக்கொண்டே இருந்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது.

செஞ்சி பஸ் நிலையம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள பெரும்பாலான கால்வாய்களில் தூர்வாரப்படவில்லை. இதனால் மழைநீர் செல்ல வழியின்றி கால்வாய்கள் நிரம்பி வழிந்தது. செஞ்சி பஸ் நிலையத்துக்குள் தண்ணீர் புகுந்ததால் குளம்போல் காட்சி அளித்தது. முழங்காலுக்கு மேல் தண்ணீர் தேங்கி நின்றதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

வாய்க்கால்களில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக செஞ்சி சக்கராபுரம் காலனி, சந்திர தெருவில் உள்ள 30-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்தனர். மழை ஓய்ந்த பிறகு வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை பொதுமக்கள் பாத்திரங்கள் மூலம் வெளியேற்றினர். இதேபோல் அனந்தபுரம், செம்மேடு, வல்லம், அவலூர்பேட்டை, வளத்தி ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக செஞ்சியில் 75 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதேபோல் மற்ற இடங்களில் பெய்த மழை விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

வல்லம்-40, வளத்தி-38, அவலூர்பேட்டை-35, செம்மேடு-30, அனந்தபுரம் 5.

மேலும் செய்திகள்