மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்காத, வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் - நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்காத வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என மன்னார்குடி நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மன்னார்குடி,
ஜல் சக்தி அபியான் திட்டத்தின்கீழ், மன்னார்குடி நகரத்தில் உள்ள கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்குதல் தொடர்பாக மன்னார்குடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சேவை சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகளின் ஆலோசனைக்கூட்டம் மன்னார்குடி நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் (பொறுப்பு) இளங்கோவன் தலைமை தாங்கினார். நகரமைப்பு ஆய்வாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தார்.
ரோட்டரி சங்க தலைவர்கள் ரமேஷ், கார்த்திகேயன், அரிமா சங்க தலைவர் சந்தோஷ், ஜேசீஸ் தலைவர்கள் சந்துரு, மரியசிரில், சரவணன், கட்டிட பொறியாளர் சங்க தலைவர் பாலமுருகன் மற்றும் பல்வேறு அமைப்பினை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அனைத்து வீடுகளிலும், மழைநீர் சேகரிப்பு அமைப்பு அமைக்கப்பட வேண்டும். ஏற்கனவே, மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் அமைக்கப்பட்டு சிதிலமடைந்திருப்பின், அதனை புதுப்பித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்காத வீடுகளுக்கு நகராட்சி குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். இனிவரும் காலங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இருந்தால் மட்டுமே நகராட்சி கட்டிட அனுமதி வழங்கப்படும். மன்னார்குடி நகராட்சிக்கு சொந்தமாக உள்ள 51 கட்டிடங்களில் முதல் கட்டமாக 8 பள்ளிகளின் கட்டிடத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை ரூ.4 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மற்ற அரசு கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்க துறை சார்ந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நகராட்சி ஆணையர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.