கவர்னர் விதித்த கெடு: விவாதத்திற்கு பிறகே நம்பிக்கை வாக்கெடுப்பு சபாநாயகர் அறிவிப்பு
கவர்னர் கெடு விதித்துள்ள நிலையில், விவாதம் நடந்த பிறகே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் மீது முதல்-மந்திரி குமாரசாமி பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர், “எங்கள் கட்சியை சேர்ந்த சீனிவாஸ் கவுடா எம்.எல்.ஏ.வுக்கு ரூ.40 கோடி முதல் ரூ.50 கோடி கொடுப்பதாக செல்போனில் பேரம் பேசினர்“ என்றார்.
அப்போது ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த சீனிவாஸ்கவுடா எம்.எல்.ஏ. குறுக்கிட்டு பேசினார்.
அவர் பேசுகையில், “பா.ஜனதாவை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அஸ்வத் நாராயணா, எஸ்.ஆர்.விஸ்வநாத் ஆகியோர் எனது வீட்டுக்கு வந்து கட்சி மாற ரூ.5 கோடியை கொடுத்தனர். எனக்கு பணம் வேண்டாம் என்று நான் சொன்னேன். அந்த பணத்தை வாங்க மறுத்துவிட்டேன். பின்னர் அவர்கள் அந்த பணத்தை எடுத்துச்சென்றுவிட்டனர்“ என்றார்.
யாரும் பேசவில்லை
அப்போது காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம் (எஸ்) கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். கவர்னருக்கு எதிராகவும் கோஷம் எழுப்பப்பட்டது. இதனால் சபையில் கூச்சல்-குழப்பம் நிலவியது. இதற்கு பா.ஜனதா தரப்பில் இருந்து யாரும் பேசவில்லை. அவர்கள் காலை முதல் சபையில் மவுனமாக அமர்ந்திருந்தனர்.
கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்கள் எவ்வளவோ கூச்சலிட்ட போதும், பா.ஜனதாவினர் மவுனத்தில் இருந்து விலகவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பு பணிகளை மதியம் 1.30 மணிக்குள் முடிக்க வேண்டும் என்று கவர்னர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி நேற்று மதியம் 1.30 மணிக்கு எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா எழுந்து, “மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு பணிகளை முடிக்க வேண்டும் என்று கவர்னர், முதல்-மந்திரிக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி தற்போது மதியம் 1.30 மணி ஆகிவிட்டது. அதனால் தற்போது வாக்கெடுப்பு நடத்தும் பணிகளை தொடங்க வேண்டும்“ என்றார்.
வாக்கெடுப்பு நடத்த முடியாது
அதற்கு சபாநாயகர் ரமேஷ்குமார், “நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் மீது விவாதம் முடிவடைந்த பிறகே வாக்கெடுப்பு நடத்த முடியும். அதற்கு முன்பு வாக்கெடுப்பு நடத்த முடியாது. யாருடைய அழுத்தத்திற்கும் நான் பயப்படமாட்டேன்“ என்றார்.
அப்போது முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் குறுக்கிட்டு, “நம்பிக்கை வாக்கெடுப்பு பணிகளை இன்று (நேற்று) மதியம் 1.30 மணிக்குள் முடிக்க வேண்டும் என்று முதல்-மந்திரிக்கு கவர்னர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு முதல்-மந்திரி குமாரசாமி பதிலளிக்க வேண்டும்“ என்றார்.
அப்போது காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்கள் மீண்டும் பா.ஜனதா மற்றும் கவர்னருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் சட்டசபையில் கூச்சல்-குழப்பம் நிலவியது. இதையடுத்து சபையை உணவு இடைவேளைக்காக சபாநாயகர் ஒத்திவைத்தார்.