மடஹள்ளி கிராமத்தில், விவசாய தோட்டத்திற்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்; 1,100 வாழை மரங்கள் சேதம் கிராம மக்கள் பீதி

மடஹள்ளி கிராமத்தில், விவசாய தோட்டத்திற்குள் புகுந்து 1,100 வாழை மரங்களை காட்டுயானைகள் நாசப்படுத்தின. காட்டுயானைகளின் அட்டகாசத்தால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.

Update: 2019-07-19 22:41 GMT
ஹலகூர்,

மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா ஹலகூர் அருகே அமைந்துள்ளது மடஹள்ளி கிராமம். இந்த கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்திருக்கிறது. இதனால் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டுயானைகள், காட்டுப்பன்றிகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் இந்த கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவும் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 6 காட்டுயானைகள் கூட்டமாக மடஹள்ளி கிராமத்திற்குள் புகுந்தன. பின்னர் அவைகள் கிராமத்தையொட்டி அமைந்துள்ள நிங்கம்மா என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்திற்குள் புகுந்து அங்கிருந்த 800 வாழை மரங்களை பிடுங்கி எறிந்தும், தின்றும், காலால் மிதித்தும் நாசப்படுத்தின. அதையடுத்து அருகே உள்ள சீனிவாசா என்பவருக்கு சொந்தமான வாழைத்தோட்டத்திற்குள் புகுந்தன. பின்னர் அங்கிருந்த 300 வாழை மரங்களை சேதப்படுத்தின.

கிராம மக்கள் பீதி

அதிகாலை வரை சீனிவாசாவின் வாழைத் தோட்டத்திலேயே தஞ்சம் அடைந்திருந்த காட்டுயானைகள், அதன்பின்னர் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன. இதுபற்றி அறிந்த நிங்கம்மாவும், சீனிவாசாவும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது காட்டுயானைகளின் அட்டகாசத்தால் 1,100 வாழை மரங்கள் சேதமடைந்திருப்பது தெரியவந்தது.

பின்னர் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நிங்கம்மா, சீனிவாசா ஆகியோருக்கு அரசிடம் இருந்து உரிய நிவாரண நிதி பெற்றுத் தருவதாகவும், இனிமேல் கிராமத்திற்குள் காட்டுயானைகள் புகாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாகவும் வனத்துறையினர் உறுதி அளித்தனர். காட்டுயானைகளின் அட்டகாசத்தால் மடஹள்ளி கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.

மேலும் செய்திகள்