மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி, மயிலாடுதுறையில் கடையடைப்பு - வக்கீல்கள் ஆர்ப்பாட்டம், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் கடையடைப்பும், வக்கீல்கள் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Update: 2019-07-19 23:15 GMT
மயிலாடுதுறை,

தமிழக சட்டசபையில் நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தென்காசி, செங்கல்பட்டு ஆகிய 2 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று அறிவித்தார். இதன் எதிரொலியாக மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை தற்போது நடைபெறும் சட்டசபை கூட்ட தொடரிலேயே அறிவிக்க வேண்டும் என்று மயிலாடுதுறை பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதனை வலியுறுத்தி நேற்று முன்தினம் இரவு மயிலாடுதுறையில் வர்த்தக சங்கம், அரசியல் கட்சிகள், சேவை சங்கங்கள், மருத்துவர் சங்கம் ஆகியன சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. அதில் முதல் கட்டமாக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடையடைப்பு செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி மயிலாடுதுறையில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி முக்கிய கடைவீதிகளான காந்திஜி சாலை, பட்டமங்கலத்தெரு, பெரியக்கடைத்தெரு, மகாதானத்தெரு, கச்சேரி சாலை, காமராஜர் சாலை, கூறைநாடு, பூக்கடைத்தெரு, ரெயிலடி, டவுன் எக்ஸ்டன்சன் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகை கடைகள், ஜவுளி கடைகள், ஓட்டல்கள், டீ கடைகள், பெட்டி கடைகள், சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

இதனால் முக்கிய கடைவீதிகள் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால், மருந்துக்கடை, பூக்கடைகள், பழக்கடைகள் மட்டும் திறந்து இருந்தன. கடையடைப்பால் வெளியூரில் இருந்து வந்த பயணிகள் சிரமத்திற்குள்ளாயினர். இந்த கடையடைப்பால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மயிலாடுதுறையில் நேற்று மாயூரம் வக்கீல்கள் சங்கம், மயிலாடுதுறை வக்கீல்கள் சங்கம் ஆகியன சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாயூரம் வக்கீல்கள் சங்க தலைவர் ராமசேயோன் தலைமை தாங்கினார். மயிலாடுதுறை வக்கீல்கள் சங்க தலைவர் வேலுகுபேந்திரன் முன்னிலை வகித்தார்.

இதில் மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை தற்போது நடைபெறும் சட்டசபை கூட்ட தொடரிலேயே அறிவிக்க வேண்டும். மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், தரங்கம்பாடி ஆகிய 4 தாலுகாக்களுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயனடைவார்கள் என்பதால் மயிலாடுதுறையை மாவட்டமாக அமைக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் வக்கீல்கள், அரசியல் கட்சியினர், வர்த்தக சங்கத்தினர், விவசாய சங்கத்தினர், பொது தொழிலாளர் சங்கத்தினர், சேவை சங்கத்தினர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்