நெல்லை தெற்கு புறவழிச்சாலையில் நீரோடை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நெல்லை தெற்கு புறவழிச்சாலையில் நீரோடை ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் நேற்று அகற்றினர்.

Update: 2019-07-19 21:45 GMT
நெல்லை,

நெல்லை தெற்கு புறவழிச்சாலையின் இருபுறமும் வயல்வெளிகள் உள்ளது. இங்கு பாளையங்கால்வாயில் உள்ள மடைகள் மூலம் தாமிரபரணி ஆற்று தண்ணீர் பாசன வசதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தெற்கு புறவழிச்சாலையின் கீழே செல்லும் நீர் ஓடைகளை கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக புகார் எழுந்தது. ஆக்கிரமிப்புகளை அகற்ற மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கிருஷ்ணசாமி, உதவி பொறியாளர் வேலாயுதம் ஆகியோர் தலைமையில் நேற்று ஊழியர்கள் தெற்கு புறவழிச்சாலை பகுதிக்கு வந்தனர்.

அவர்கள் பொக்லைன் எந்திரத்தை கொண்டு புறவழிச்சாலையையொட்டி கடைகளின் முன்பு சிறிய குழாய்கள் அமைத்தும், மண் கொட்டியும் அடைக்கப்பட்டிருந்த தண்ணீர் செல்லும் பாதைகளை தோண்டி அப்புறப்படுத்தினர். 25 கடைகள் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. பெரிய கடைகள் முன்பு அமைக்கப்பட்டிருந்த விளக்கு தூண்கள், திண்டுகளும் பொக்லைன் எந்திரங்களால் அடியோடு தோண்டி அகற்றப்பட்டன. 2 பெட்டிகளை சாலையோரத்தில் இருந்து அகற்றினர்.

பாளையங்கால்வாய் கரையில் இருந்து பெட்ரோல் பங்க் 4 முக்கு ரோடு வரை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றன. இதற்கு ஒருசில கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையொட்டி மேலப்பாளையம் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்