சங்கரன்கோவிலில் அடிப்படை வசதிகள் கேட்டு நகரசபை அலுவலகம் முற்றுகை
சங்கரன்கோவிலில் அடிப்படை வசதிகள் கேட்டு நகரசபை அலுவலகத்தை அரசியல் கட்சியினர் முற்றுகையிட்டனர்.
சங்கரன்கோவில்,
சங்கரன்கோவில் நகரில் அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் நகரசபை அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் இதுதொடர்பாக சங்கரன்கோவில் நகரசபை ஆணையாளர் முகைதீன் அப்துல்காதரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
நகரசபை சார்பில் திருவேங்கடம் சாலையில் உள்ள தனியார் வணிகவளாகம் அருகே சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி புதிய சாலை அமைக்கவேண்டும். பழைய நகரசபை அலுவலகத்தில் உள்ள பழைய கட்டிடங்களை அப்புறப்படுத்தி விட்டு இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும். சங்கரநாராயண சுவாமி கோவில் அருகே சுகாதார வசதி செய்து கொடுக்கவேண்டும்.
ஆடித்தவசு திருவிழா நடைபெற உள்ளதால் நகரசபைக்கு உட்பட்ட சாலைகளை சீரமைக்கவேண்டும். சங்கரன்கோவில் நகரில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்தர்கள் நலன் கருதி சுவாமி சன்னதியில் ஆடித்தவசு திருவிழா நாட்களில் தற்காலிக கடைகள் அமைக்கக்கூடாது. இதற்காக நகரசபை சார்பில் பொதுஏலம் நடத்தக்கூடாது. இந்த கோரிக்கைகளை வருகிற 25-ந் தேதிக்குள் நிறைவேற்றாவிட்டால், அடுத்த மாதம் (ஆகஸ்டு) 1-ந் தேதி பொதுமக்களை திரட்டி நகரசபை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தி.மு.க. மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் சுப்பையா, முன்னாள் நகர செயலாளர் ராஜதுரை, ம.தி.மு.க. நகர செயலாளர் ஆறுமுகசாமி, விடுதலை சிறுத்தைகள் தொகுதி செயலாளர் பீர்மைதீன், பார்வர்டு பிளாக் மாவட்ட செயலாளர் தங்கபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் அசோக்ராஜ், காங்கிரஸ் கட்சி நிர்வாகி பீர்முகம்மது உள்பட பலர் கலந்து கொண்டனர்.