மீன்பிடி தடைக்கால நிவாரண நிதிக்கு விண்ணப்பிக்க அலைக்கழிப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் மீனவர்கள் குற்றச்சாட்டு

மீன்பிடி தடைக்கால நிவாரண நிதிக்கு விண்ணப்பிக்க மீனவர்கள் அலைக்கழிக்கப்படுவதாக குறைதீர்க்கும் கூட்டத்தில் மீனவர்கள் குற்றம் சாட்டினர்.

Update: 2019-07-19 21:30 GMT
நாகர்கோவில், 

குமரி மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார். கூட்டத்தில் வருவாய் அதிகாரி ரேவதி, மீன்வளத்துறை துணை இயக்குனர் லாமேக் ஜெயக்குமார், நாகர்கோவில் உதவி இயக்குனர் மோகன்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் மீனவ பிரதிநிதிகள், பாதிரியார்கள் கலந்துகொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் மீனவர் விபத்து காப்புறுதி திட்டத்தின் கீழ் 2 பெண்களுக்கு தலா ரூ.2 லட்சத்துக்கான காசோலையை கலெக்டர் பிரசாந்த் வடநேரே வழங்கினார். அதாவது கடலில் மூழ்கி பலியான 2 மீனவர்களின் குடும்பத்தாருக்கு இந்த பணம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து ஏராளமான மீனவர்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி கலெக்டரிடம் அளித்தனர்.

அதன்பிறகு நடைபெற்ற கூட்டத்தில் மீனவ பிரதிநிதிகள் வலியுறுத்திய கோரிக்கைகளின் விவரம் வருமாறு:-

நீரோடி முதல் இரையுமன்துறை வரை சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆனால் சில இடங்களில் மட்டுமே சாலைகள் சீரமைக்கப்பட்டு உள்ளன. தூத்தூர் பகுதியில் 9 சென்டி மீட்டர் உயரத்துக்கு பதிலாக 5 சென்டி மீட்டர் உயரத்தில் சாலை அமைத்து இருக்கிறார்கள். மேலும் தூத்தூரில் சாலை சீரமைப்புக்கு பதிலாக சாலையை அகலப்படுத்தி தர வேண்டும். மீனவர் நல வாரியத்தில் பதிவு செய்து 60 வயது நிரம்பிய உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாமல் உள்ளது. எனவே ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

மீன்பிடி தடைக்காலத்துக்கு வழங்கப்படும் நிவாரண நிதிக்கு விண்ணப்பிக்க மீனவர்கள் நாகர்கோவிலுக்கு வரவேண்டி உள்ளது. இதனால் நாங்கள வேலைகளை போட்டுவிட்டு இங்கு வருகிறோம். அப்படியே வந்தாலும் உடனே பதிவு செய்ய முடியவில்லை. சர்வர் கோளாறு என்று கூறி மீனவர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. கோழி மற்றும் மாட்டு கழிவுகளையும் கொட்டுவதால் கடல் வளம் பாதிக்கப்படுகிறது. இதனால் மீன்கள் வேறு இடத்துக்கு சென்றுவிடுகின்றன. எனவே குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும். மேலும் கீச்சான், மூச்சான் வலை பயன்படுத்துவதையும் தடை செய்தல் அவசியம். தேங்காப்பட்டணம் துறைமுக வாயிலை மணல் மூடி உள்ளது. அங்கு நிறுத்தப்பட்டு இருந்த படகுகள் அலையில் சிக்கி சேதம் அடைந்தன. எனவே மணலை அப்புறப்படுத்த வேண்டும். மேலும் மணல் அள்ள நிரந்தர எந்திரம் ஒன்றையும் துறைமுகத்துக்கு கொண்டு வரவேண்டும். குமரி மாவட்ட மீனவர்கள் வெளியூர்களில் மீன்பிடிக்க சென்றால் படகுக்கு பதிவு செய்ய பணம் செலவு செய்ய வேண்டி உள்ளது. இதற்கும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கு பதில் அளித்து அதிகாரிகள் பேசுகையில் கூறியதாவது:-

தூத்தூர் பகுதியில் இன்னும் 400 மீட்டர் தூரத்துக்கு மட்டும் சாலை சீரமைக்க வேண்டி உள்ளன. சாலையை அகலப்படுத்துவது தொடர்பாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பேசி வரைவு அறிக்கை தயார் செய்யப்படும். வாரியத்தில் பதிவு செய்து 60 வயது நிறைவடைந்த மீனவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக அரசு தான் முடிவு செய்ய வேண்டும். மீன்பிடி தடைகால நிவாரணம் பெற எங்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்ற திட்டத்தை கொண்டு வர ஆய்வு செய்யப்படும்.

குப்பை கொட்டுவது தொடர்பான பிரச்சினை குமரி மாவட்டம் முழுவதும் உள்ளது. ஒவ்வொரு பேரூராட்சிகளிலும் குப்பைகளை தரம்பிரித்து அப்புறப்படுத்த ஒரு ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. சில பேரூராட்சிகளில் இந்த பணிகள் நடக்கின்றன. ஆனால் சில பேரூராட்சிகளில் ஒரு ஏக்கர் நிலம் கிடைக்கவில்லை. எனவே நிலம் கிடைத்ததும் குப்பை கொட்டுவது தொடர்பான பிரச்சினை சரிசெய்யப்படும். கீச்சான், மூச்சான் வலையை பயன்படுத்துவது தொடர்பாக ஏற்கனவே உள்ள உத்தரவை மீனவர்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

குமரி மாவட்டம் சின்ன முட்டத்தில் மணல் அள்ளும் எந்திரம் உள்ளது. தேங்காப்பட்டிணம் துறைமுகத்துக்கு மணல் அள்ளும் எந்திரம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். குமரி மாவட்ட மீனவர்கள் வெளியூர்களுக்கு மீன்பிடிக்க சென்றால் தங்குதள இடமாற்ற விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளித்தால் படகு பதிவுக்கு பணம் செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

மேலும் செய்திகள்