கொடைக்கானல் அருகே, வாழை மரங்களை நாசப்படுத்திய காட்டுயானைகள் - தொடரும் அட்டகாசத்தால் விவசாயிகள் அச்சம்
கொடைக்கானல் அருகே தோட்டத்துக்குள் புகுந்து வாழை மரங்களை காட்டுயானைகள் சேதப்படுத்தின. தொடரும் அட்டகாசத்தால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
கொடைக்கானல்,
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரை அடுத்துள்ள பேத்துப்பாறை, புலியூர், அஞ்சுவீடு, அஞ்சுரான் மந்தை போன்ற பகுதிகளில் சமீப காலமாக காட்டுயானைகள் அட்டகாசம் செய்து வருகிறது. விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்துவது மட்டுமின்றி வீடுகளை சேதப்படுத்துகின்றன.
இந்த காட்டுயானைகள் தாக்கியதில் இதுவரை 5-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த காட்டுயானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தபோதிலும் தொடர்ந்து காட்டுயானைகள் தோட்டங்களுக்குள் புகுந்து வருகின்றன.
இந்தநிலையில் நேற்று முன்தினம் பேத்துப்பாறை பகுதியில் உள்ள ஜெயமுருகன் என்பவரது தோட்டத்துக்குள் காட்டுயானைகள் கூட்டமாக புகுந்தன. பின்னர் அங்குள்ள வாழை மரங்களை நாசப்படுத்தின. அதிகாலை வரை முகாமிட்டு இருந்த காட்டுயானைகள் பின்னர் தானாக வனப்பகுதிக்குள் சென்றன.
நேற்று தோட்டத்துக்கு சென்ற ஜெயமுருகன் வாழை மரங்களை காட்டுயானைகள் சேதப்படுத்தியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் கவலையுடன் தெரிவித்தார். தொடர்ந்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
எனவே காட்டுயானைகள் அட்டகாசத்தை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் சேதமான வாழை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.