தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி விவசாயி சாவு உறவினர்கள் போராட்டம்
தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா குள்ளட்டியைச் சேர்ந்தவர் கோவிந்தப்பா (வயது 65). விவசாயி. இவர் நேற்று காலை காப்பு காட்டிற்குள் சென்றார். அப்போது அந்த வழியாக குட்டியுடன் சுற்றித்திரிந்த பெண் யானை ஒன்று கோவிந்தப்பா அருகில் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தப்பியோட முயன்றார். அதற்குள் அந்த யானை அவரை துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த கோவிந்தப்பா யானையிடம் இருந்து தப்பிக்க அங்கிருந்து ஓடினார்.
அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்த அவரை யானை மிதித்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் யானையை விரட்டி விட்டு கோவிந்தப்பாவை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கோவிந்தப்பாவின் உடலை அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த இடத்திலேயே வைத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை தாசில்தார் பாலசுந்தரம், போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், வனச்சரகர் சுகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர்கள் இந்த பகுதியில் சுற்றி திரியும் யானைகளை விரட்டிட நடவடிக்கை எடுக்க வேண்டும். யானை தாக்கி இறந்த கோவிந்தப்பாவின் குடும்பத்திற்கு உரிய நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றனர்.
உடனே அதிகாரிகள் யானைகளை விரட்டிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், யானை தாக்கி இறந்த கோவிந்தப்பாவின் குடும்பத்திற்கு உரிய நிவாரண நிதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் கோவிந்தப்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.