பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆதார் அட்டை பெற அலைமோதும் பொதுமக்கள்

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆதார் அட்டை பெற பொதுமக்கள் அலைமோதி வருகின்றனர்.

Update: 2019-07-19 23:00 GMT
பெரம்பலூர், 

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தின் தரைத்தளத்தில் அரசின் சார்பில் பொதுமக்கள் மத்திய அரசின் ஆதார் அட்டை புதிதாக விண்ணப்பிப்பதற்கான மையம் உள்ளது. இதேபோல் பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, குன்னம் ஆகிய தாலுகா அலுவலகங்களிலும், பெரம்பலூர் நகராட்சியிலும் ஆதார் அட்டை விண்ணப்பிப்பதற்காக மையம் உள்ளது. மேலும் அந்தந்த மையத்தில் ஆதார் அட்டையில் திருத்தம் இருந்தால், திருத்தி கொடுக்கப்படும். இதனால் இந்த மையத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் வருவதால் எப்போதும் கூட்டமாக காணப்படும். தற்போது பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மையம் மட்டும் செயல்படுகிறது. மற்ற மையங்கள் செயல்படவில்லை.

இதனால் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மையத்தில் ஆதார் அட்டை விண்ணப்பிப்பதற்காகவும், ஆதார் அட்டையில் திருத்தம் செய்வதற்காகவும் வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் அந்த மையத்தில் விண்ணப்பங்களை கணினியில் பதிவு செய்ய ஊழியர் ஒருவர் மட்டுமே பணியாற்றுகிறார். இதனால் ஆதார் அட்டை விண்ணப்பிப்பதற்காக வரும் முதல் 60 பேருக்கு டோக்கன் வழங்கப்படுகிறது.

அவர்களும் நீண்ட நேரம் காத்திருந்து ஆதார் அட்டை பெறுவதற்கான விண்ணங்களை பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. அதன்பிறகு வருபவர்கள் அடுத்த நாள் வருமாறு ஊழியரால் அறிவுறுத்தப்படுகின்றனர். இதனால் நீண்ட தூரத்தில் இருந்து ஆதார் அட்டை விண்ணப்பிப்பதற்காக வருபவர்கள் ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாலுகா அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் செயல்படாமல் உள்ள ஆதார் அட்டை விண்ணப்பிக்கும் மையத்தினை செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மையத்தில் கூடுதல் ஊழியர்களை நியமிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்