குழந்தைகளுக்கு இலவச ஆங்கில வழி முன்பருவ கல்வி கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்

மலைப்பூர் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு இலவச ஆங்கில வழி முன்பருவ கல்வியை கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்.

Update: 2019-07-19 23:15 GMT
காவேரிப்பட்டணம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் வட்டாரத்தில் செயல்பட்டு வரும் மலைப்பையூர் அங்கன்வாடி மையத்தில், குழந்தைகளுக்கு இலவச ஆங்கில வழி முன்பருவ கல்வியை மாவட்ட கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக கலெக்டர் பிரபாகர் கூறியதாவது:- சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அங்கன்வாடி மையங்களில் 2 முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அறிவு, மொழி, உடல், சமூகம் மற்றும் மனஎழுச்சி வளர்ச்சி தூண்டும் வகையில் பாடத்திட்டம் வகுக்கப்பட்டு மாதம் ஒரு தலைப்பு வீதம் ‘தன்னைப்பற்றி“ பூக்கள், காய்கறிகள், பழங்கள், பொம்மைகள், தண்ணீர், வாகனங்கள், விலங்குகள்;, பண்டிகைகள், வாழ்க்கைக்கு உதவும் நமது நண்பர்கள், பருவகாலங்கள், மரம், செடி, கொடிகள் ஆகிய தலைப்புகளில் கலந்துரையாடல், கதை சொல்லுதல் திட்டமிட்ட விளையாட்டு ஆகிய செயல்பாடுகள் அங்கன்வாடி பணியாளரால் குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றது.

தற்போது செயல்வழி கற்கும் முறையில் குழந்தைகள் ஆர்வமுடன் படிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மற்றபடி செயல்வழி மூலம் கற்கும் இத்திட்டத்தில் அமைக்டாலா கல்வி நிறுவனத்திற்கு சொந்தமான கல்வி உபகரணங்களை வைத்து குழந்தைகளுக்கு கல்வி அளிக்க அந்நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராம பகுதி மாணவர்களும் தரமான கல்வியை இலவசமாக பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட அலுவலர் நாகலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பத்மாவதி, அமைக்டாலா கல்வி நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் லட்சுமிராமமூர்த்தி, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்