கலெக்டர்-போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், தீக்குளிக்க முயற்சிப்போரை தடுக்க 2 போலீஸ் தனிப்படைகள்

திண்டுக்கல் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சிப்போரை தடுக்க 2 போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Update: 2019-07-18 22:45 GMT
திண்டுக்கல், 

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு மனு கொடுக்க தினமும் பொதுமக்கள் வருகின்றனர். இதில் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் குறைதீர்க்கும் கூட்டத்தில், மனு கொடுக்க 300-க்கும் மேற்பட்டோர் வருவது குறிப்பிடத்தக்கது. அப்போது விரக்தியில் சிலர் தீக்குளிக்க முயற்சி செய்வது அடிக்கடி நடக்கிறது.

இதற்காக மண்எண்ணெய் அல்லது பெட்ரோலை பாட்டிலில் மறைத்து எடுத்து வருகின்றனர். அதுபோன்ற நபர்களை கண்காணிக்கவும், தீக்குளிப்பு சம்பவத்தை தடுக்கவும் 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். எனினும், மண்எண்ணெய், பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை பெண்கள் மறைத்து கொண்டு வந்து விடுகின்றனர்.

இதனால் கலெக்டர் அலுவலகத்தின் பிற பகுதிகளிலும் தீக்குளிப்பு முயற்சிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே, தீக்குளிக்க முயற்சிப்போரை தடுக்கவும், மறைத்து எடுத்து வரப்படும் மண்எண்ணெய் அல்லது பெட்ரோலை கண்டுபிடிக்கவும் 2 போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தலா ஒரு போலீஸ் தனிப்படை நியமிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தனிப்படையிலும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர், பெண் போலீசார், தீயணைப்பு வீரர் மற்றும் தனிப்பிரிவு போலீஸ்காரர் உள்பட மொத்தம் 6 பேர் இடம்பெற்று உள்ளனர். இவர்கள் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வருவோரை முழுமையாக சோதனை செய்கின்றனர். மேலும் அந்த வளாகத்தில் சுற்றி திரியும் அனைவரையும் கண்காணித்து வருகின்றனர். சந்தேகப்படும் வகையில் நடமாடும் நபர்களை பிடித்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. வ்

மேலும் செய்திகள்