பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்து செல்வதில் சிக்கல் - 3 நாட்களாக காத்திருக்கும் மிதவைக்கப்பல்

மிதவைக்கப்பல் பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டு 3 நாட்களாக காத்திருக்கிறது.

Update: 2019-07-18 23:00 GMT
ராமேசுவரம்,

கேரளாவிலிருந்து பாம்பன் ரெயில்வே தூக்குப்பாலத்தை கடந்து ஆந்திர மாநிலம் காக்கிநாடா துறைமுகம் செல்வதற்காக கடலை தோண்டி ஆழப்படுத்தும் பெரிய மிதவைக்கப்பல் ஒன்று புறப்பட்டது. கடந்த 16-ந் தேதி அன்று பாம்பன் குந்துகால் கடல் பகுதிக்கு வந்து அங்கு நங்கூரமிட்டு அது நிறுத்தி வைக்கப்பட்டது. வழக்கத்திற்கு மாறாக வீசி வரும் பலத்த சூறாவளிக்காற்று மற்றும் கடல் கொந்தளிப்பால் நங்கூர கயிறு அறுந்து அந்த கப்பல், ஆழம் குறைவான கடல் பகுதியில் தரை தட்டி நின்றது. தரை தட்டிய இந்த கப்பல் 2 மீன் பிடி விசைப்படகு மூலம் உடனடியாக மீட்கப்பட்டு பாம்பன் குருசடை தீவு அருகே உள்ள ஆழமான கடல் பகுதியில் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தூக்குப்பாலத்தை கடந்து செல்வதற்காக கடந்த 3 நாட்களாக பாம்பன் குருசடைதீவு கடல் பகுதியில் காத்திருந்த மிதவைக்கப்பலை நேற்று துறைமுக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது நங்கூர கயிறு அறுந்து தரை தட்டி நின்ற போது கப்பலின் அடியில் உள்ள புரொபல்லர் என்று சொல்லக் கூடிய இழையானது வளைந்து சிறிய அளவில் சேதமாகி இருப்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து துறைமுக அதிகாரிகள் அந்த கப்பலின் இழையை சரி செய்ய வேண்டும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் தூக்குப்பாலத்தை கடந்து செல்ல சென்னையில் உள்ள துறைமுக அதிகாரிகளிடமிருந்து அனுமதி வந்த பின்பு தான் கடந்து செல்ல அனுமதி வழங்க முடியும் எனவும் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இது பற்றி துறைமுக அதிகாரிகள் கூறுகையில், மிதவைக்கப்பலின் இழை சேதமடைந்துள்ளதால் இந்த கப்பல் தூக்குப்பாலத்தை கடந்து செல்வது குறித்து சென்னையில் உள்ள துறைமுக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிதவைக்கப்பல் கடந்து செல்ல அனுமதி கொடுத்தாலும் இன்னும் 3 நாட்களுக்கு பிறகே இந்த கப்பல் தூக்குப்பாலத்தை கடந்து செல்ல அனுமதி வழங்கப்படும் என்றார்.

மாதம் ஒரு முறை மட்டுமே தூக்குப்பாலம் திறக்கப்படும் என்ற ரெயில்வே அதிகாரிகளின் முடிவால் தூக்குப்பாலத்தை கடக்க வரும் கப்பல்கள் தொடர்ந்து பல நாட்கள் காத்திருந்தே செல்ல வேண்டிய நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்