தேவூர் அருகே முதியவர் கல்லால் அடித்துக்கொலை

தேவூர் அருகே முதியவர் கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2019-07-18 22:00 GMT
தேவூர், 

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தேவூர் அருகே உள்ள ரெட்டிபாளையம் சுண்டக்காய் கரடு பகுதியில் சங்ககிரி செல்லும் சாலையோரம் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் பிணமாக கிடந்துள்ளார். இதைப்பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்தனர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் சண்முகம் தேவூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் சங்ககிரி போலீஸ் துணை சூப்பிரண்டு அசோக்குமார், இன்ஸ்பெக்டர் முத்துசாமி, தேவூர் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் பிணத்தை பார்வையிட்டு, அந்த பகுதி பொதுமக்களிடம் விசாரித்தனர். தொடர்ந்து போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்துக்கு சேலத்தில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய், முதியவர் இறந்து கிடந்த இடத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரம் சென்று விட்டு நின்றது. மேலும் தடயவியல் துறை நிபுணர்களும் ஆய்வு நடத்தினர். இதனிடையே போலீசார் அந்த பகுதியில் ரத்தக்கறையுடன் கிடந்த 3 கற்களை கைப்பற்றி உள்ளனர். இதனால் அவர் கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

தொடர்ந்து தேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவரை கொன்றவர்கள் யார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? எனவும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

முதியவர் கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்