கெங்கவல்லி அருகே குடிநீர் கேட்டு கடம்பூர் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

கெங்கவல்லி அருகே குடிநீர் கேட்டு கடம்பூர் ஊராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2019-07-18 22:00 GMT
கெங்கவல்லி, 

கெங்கவல்லி அருகே உள்ள கடம்பூர் ஊராட்சியில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த ஊராட்சிக்குட்பட்ட 9 வார்டுகளிலும் கடந்த சில நாட்களாக சரியாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் கடம்பூர் ஊராட்சி அலுவலகத்தை மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்த கிராம மக்கள் குடிநீர் கேட்டு முற்றுகையிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் முற்றுகையில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இது குறித்து முற்றுகையில் ஈடுபட்ட கிராம மக்கள் கூறியதாவது:-

கடம்பூர் ஊராட்சியில் உள்ள 9 வார்டுகளிலும் மக்களுக்கு குடிநீர் தாமதமாக வழங்கப்படுகிறது. குடிநீர் சரிவர ஊராட்சி நிர்வாகம் சார்பில் வினியோகம் செய்யப்படவில்லை. குடிநீர் கிடைக்காமல் கடந்த ஒரு மாதமாக கடும் சிரமம் அடைந்து வருகிறோம். இது தொடர்பாக ஊராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. குடிநீர் கிடைக்காமல் கடும் அவதி அடைந்து வந்ததால், முற்றுகையில் ஈடுபட்டோம். குடிநீருக்காக மாதந்தோறும் பணம் கட்டியும், சரியாக வினியோகிக்கவில்லை என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்