உயர்மின் அழுத்த கோபுரம், 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
உயர்மின் அழுத்த கோபுரம், 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் பெண்கள் உள்பட 130 பேரை கைது செய்தனர்.
திருவண்ணாமலை,
உயர்மின் அழுத்த கோபுரங்கள் மற்றும் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆகியவை இணைந்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு 18-ந் தேதி (நேற்று) காத்திருப்பு போராட்டம் நடத்த போவதாக விவசாயிகள் தரப்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த போராட்டத்திற்கு போலீஸ் தரப்பில் அனுமதி வழங்கப்படவில்லை. இதனையடுத்து விவசாயிகள் அறிவித்தபடி நேற்று காலை கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் வந்தனர். முன்னதாக கலெக்டர் அலுவலகம் முன்பு திருவண்ணாமலை துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தசாமி, சுப்பிரமணியன் உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.
விவசாயிகள் காலை 11.30 மணி அளவில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். இதில் 8 வழிச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பினர், 8 வழிச்சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர். அப்போது 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உயர் மின் அழுத்த கோபுரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் 7 பெண்கள் உள்பட 130 பேரை போலீசார் கைது செய்து திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.