ஈரோட்டில், தேங்காய்களை தீயில் சுட்டு ஆடி மாதத்தை வரவேற்ற பெண்கள்

ஈரோட்டில் தேங்காய்களை தீயில் சுட்டு ஆடி மாதத்தை பெண்கள் வரவேற்றனர்.

Update: 2019-07-17 22:45 GMT
ஈரோடு,

ஈரோட்டில் ஆண்டுதோறும் ஆடி மாதம் பிறப்பை வெகு சிறப்பாக கொண்டாடி வரவேற்பது வழக்கம். அப்போது வீட்டு வாசலில் பெண்கள் தேங்காய்களை சுட்டு விநாயகருக்கு படைத்து வழிபாடு நடத்துவது தனிச்சிறப்பு. அதுபோல் ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று ஆடி மாத பிறப்பு உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

பெண்கள் தங்களது வீடுகளை சுத்தம் செய்து வாசலில் சுண்ணாம்பு, சாணி மொழுகி அழகிய கோலமிட்டனர். தீயில் சுடுவதற்கு தேவையான தேங்காய்களை தயார் செய்தனர். தேங்காயின் கண் பகுதியை உடைத்து அதில் இருந்து தண்ணீரை சிறிதளவு வெளியேற்றி பச்சரிசி, நிலக்கடலை, எள், நாட்டு சர்க்கரை, பச்சை பயறு ஆகியவற்றை உள்ளே வைத்தனர். பின்னர் நீளமான குச்சியில் தேங்காய்கள் சொருகி வைக்கப்பட்டன.

வீட்டின் முன்பு நெருப்பு பற்ற வைத்து அதில் பெண்கள் தேங்காய்களை சுட்டனர். பின்னர் சுடப்பட்ட தேங்காய்களை அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு கொண்டு சென்று வழிபட்டனர். இதையடுத்து தேங்காய்களை உடைத்து குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு பகிர்ந்து கொடுத்து சாப்பிட்டனர்.

இதுகுறித்து ஈரோடு குமலன்குட்டையில் வழிபாட்டில் ஈடுபட்ட பெண்கள் சிலர் கூறும்போது, “ஆடி மாத பிறப்பை வரவேற்கும் வகையில் தேங்காய் தீயில் சுடப்பட்டது. இவ்வாறு செய்து விநாயகருக்கு படைப்பதன் மூலம் குடும்ப நலன் பெற்று செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இதை ஒரு விழாவாகவே ஈரோடு மக்கள் கொண்டாடி வருகிறார்கள். மேலும், தேங்காயில் பச்சரிசி, நிலக்கடலை, எள் உள்ளிட்டவற்றை வைத்து சுட்டு சாப்பிடுவதன் மூலம் உடல் பலம் பெறும்” என்றனர். 

மேலும் செய்திகள்