நாசிக் அருகே திகில் சம்பவம் மலை உச்சியில் இருந்து தள்ளி விட்டு மனைவி கொலை கணவர் கைது
நாசிக் அருகே மலை உச்சியில் இருந்து மனைவியை தள்ளி விட்டு கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
நாசிக்,
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பாபுலால் காடே(வயது 30). இவரது மனைவி கவிதா(22). இருவரும் நேற்று முன்தினம் நாசிக் மாவட்டம் நந்தூரி மலைப்பகுதியில் உள்ள புகழ்பெற்ற சப்தசுருங்கி கோவிலுக்கு வந்திருந்திருந்தனர். அவர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் மலை உச்சியில் நின்று பேசிக் கொண்டு இருந்தனர். இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென பாபுலால் காடே, மனைவியை மலை உச்சியில் இருந்து பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டார். இதில் கவிதா 800 அடி பள்ளத்தாக்கில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
கைது
இந்த சம்பவத்தை அருகில் நின்று பார்த்த பழவியாபாரி ஒருவர் கூச்சல் போட்டார். இதனால் அந்த பகுதியில் நின்றவர்கள் ஓடி வந்து பாபுலால் காடேவை பிடித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து அவரை கைதுசெய்தனர்.
மேலும் பள்ளத்தாக்கில் இருந்து கவிதாவின் உடல் நீண்ட போரட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்டது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விசாரணை
போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், பாபுலால் காடேயின் சகோதரியை கவிதாவின் சகோதரருக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டு இருந்தது. அந்த தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்ப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவரிடம் கோபித்து கொண்டு பாபுலால் காடேயின் வீட்டுக்கு அவரது சகோதரி அடிக்கடி வந்து தங்கியுள்ளார். இதற்கு கவிதா எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பான பிரச்சினையில் பாபுலால் காடே தனது மனைவியை மலை உச்சியில் இருந்து தள்ளி விட்டு கொன்றாரா? அல்லது வேறு காரணமா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திட்டமிட்டு நடந்த கொலையா?
சாமி தரிசனம் செய்வதற்காக வாங்கிய பூஜை பொருட்களுடன் கணவன்-மனைவி இருவரும் செல்போனில் போட்டோ எடுத்து உள்ளனர். இது தற்செயலாக நடந்த வாக்குவாதத்தின் போது நடந்த கொலையா? அல்லது திட்டமிட்டு மனைவியை கோவிலுக்கு அழைத்து வந்து மலை உச்சியில் இருந்து தள்ளி விடப்பட்டு நடந்த கொலையா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவிலுக்கு வந்த இடத்தில் மலை உச்சியில் இருந்து ஒருவர் தனது மனைவியை தள்ளி விட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.