விருதுநகரில் அரசு சட்டக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - முதல்-அமைச்சருக்கு கோரிக்கை

முதல்-அமைச்சர் அறிவித்துள்ள 3 சட்டக்கல்லூரிகளில் விருதுநகரில் ஒரு அரசு சட்டக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2019-07-17 22:45 GMT
விருதுநகர்,

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த விருதுநகர் மாவட்டம் கல்வியில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. பள்ளிக்கல்வியை பொறுத்தமட்டில் அனைத்து கிராமங்களிலும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, 80 சதவீத கிராமங்களில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளில் தொடர்ந்து சிறப்பு பெற்று வரும் விருதுநகர் மாவட்டத்தில் மேல்நிலை கல்வியை முடித்தவர்கள் கல்லூரி படிப்பிற்கும், தொழில் கல்வி படிப்பிற்கும் தனியார் கல்லூரி நிறுவனங்களையே தேடி செல்லும் நிலை உள்ளது. இங்கு அரசு கலைக்கல்லூரிகளோ, என்ஜினீயரிங் கல்லூரிகளோ, பாலிடெக்னிக் கல்லூரிகளோ இல்லாத நிலை உள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் சார்பில் உறுப்பு கல்லூரிகள் செயல்பட்டாலும் அங்கு தேவையான அளவிற்கு உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலை உள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு விருதுநகரில் மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் என்று அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்தார். அதற்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இடம் தேர்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் அதற்கான பணிகள் நிறுத்தப்பட்டன. அதன்பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை. இதைத்தொடர்ந்து மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தென் மாவட்டங்களில் பல் மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும் என அறிவித்தார். இந்த பல் மருத்துவக்கல்லூரியை விருதுநகரில் தொடங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுநகரில் பல் மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் என்று அறிவித்ததுடன் ரூ.50 லட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார். ஆனால் 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் பல் மருத்துவக்கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைப்படி மருத்துவக்கல்லூரி இருந்தால் தான் பல் மருத்துவக்கல்லூரி தொடங்க அனுமதி வழங்கப்படும் என கூறப்பட்டது. இதனால் மாவட்ட மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இதற்கிடையே தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதிதாக 3 சட்டக்கல்லூரிகள் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதில் ஒரு சட்டக்கல்லூரியை விருதுநகரில் ஏற்படுத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரி விருதுநகரில் தொடங்கப்படாத நிலையில் சட்டக்கல்லூரி தொடங்குவதற்கு முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விருதுநகர் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் செய்திகள்