சகிப்புத்தன்மையே மிகச்சிறந்த ஆயுதம் - மாவட்ட நீதிபதி பேச்சு

ராமநாதபுரத்தில் நடந்த சர்வதேச நீதிநாள் விழாவில் சகிப்புத்தன்மையே மிகச்சிறந்த ஆயுதம் என்று மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் பேசினார்.

Update: 2019-07-17 22:30 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சர்வதேச நீதிநாள் விழா நடைபெற்றது. மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் தலைமை வகித்தார்.

மக்கள் நீதிமன்ற நீதிபதி ராமகிருஷ்ணன், சிறப்பு நீதிமன்ற நீதிபதி தனியரசு, மகிளா நீதிபதி பகவதியம்மாள், கூடுதல் மாவட்ட நீதிபதி ரபி, தலைமை குற்றவியல் நீதிபதி சுபத்ரா, கூடுதல் மகிளா நீதிபதி ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சப்-கோர்ட்டு நீதிபதி சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ப்ரீத்தா வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில், சர்வதேச நீதிநாளையொட்டி சட்ட விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்து சட்ட உதவிகள் மையத்தின் துண்டு பிரசுரங்களை வினியோகித்து மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் பேசியதாவது:-

ரோம் நகரில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவான நாள் சர்வதேச நீதிநாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை ஏற்படவும், தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கவும், நிரபராதிகள் தண்டிக்கப்படாமலும் இருக்க இந்த சர்வதேச நீதிநாள் தீவிரமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

நீதிமன்றங்கள் நிச்சயம் நீதியை அளிக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த நீதிநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டில் உள்ள கொடுமைகளை தட்டிக்கேட்கவும், நீதிமுறைகளை ஒவ்வொரு குடிமகனும் முறையாக கடைப்பிடிக்கவும், அனைவருக்கும் சமமான நியாயமான தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்று இந்த நாளில் அனைவரும் உறுதி ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சகிப்புத்தன்மையே நமக்கான மிகச்சிறந்த ஆயுதம் ஆகும். இந்த சகிப்புத்தன்மையையும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும் வளர்த்து கொண்டால் எந்த பிரச்சினையும், அதனால் ஏற்படும் குற்றங்களும் குறைந்து விடும். எந்த ஒரு தனிமனிதனுக்கும் அவனுக்கான உரிமைகள் மறுக்கப்படும்போது நீதிமன்றம் அவனுக்கான உரிமையை வழங்குகிறது. சட்டப் பணிகள் ஆணைக்குழு உயர்ந்தவர், ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் சட்ட உதவி கிடைக்க வழிவகை செய்கிறது. முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் இந்த சட்ட உதவியை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், வக்கீல் சங்க தலைவர் ரவிச்சந்திரராமவன்னி, செயலாளர் நம்புநாயகம் உள்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாக அலுவலர்கள் பிலோமின், லோகசுப்பிரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்