சாயல்குடியில் 2 வீடுகளில் 110 பவுன் நகை- ரூ.2 லட்சம் கொள்ளை; மர்ம நபர்கள் கைவரிசை

சாயல்குடியில் ஒரே நாளில் 2 வீடுகளில் 110 பவுன் நகை, ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2019-07-17 22:00 GMT
சாயல்குடி,

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே இருவேலி பகுதியைச் சேர்ந்தவர் அரியமூர்த்தி. வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றார். இவரது மனைவி பைரவி(வயது 30). பைரவி நேற்று காலை அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். மதியம் 3 மணியளவில் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்ததோடு பொருட்களும் சிதறி கிடந்தன. உள்ளே வைத்திருந்த 70 பவுன் நகை மாய மாகி இருந்தது. உடனே அவர் இதுகுறித்து சாயல்குடி இன்ஸ்பெக்டர் கனகா பாயிடம் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதேபோன்று சாயல்குடி வி.வி.ஆர். பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன்(வயது 48). இவரது மனைவி அமுதா(45). ஜெயசீலன் கடலாடி பகுதியில் யூனியன் தொடக்கப்பள்ளி ஆசிரியராக உள்ளார். அமுதா கொக்கரசன் கோட்டை ஊராட்சி செயலராக உள்ளார். இருவரும் வீட்டினை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர்.

இந்த நிலையில் வேலைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பிய ஜெயசீலன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளானார்.

பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 40 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் பணத்தை யாரோ மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இந்த இரு புகார்களின் பேரிலும் சாயல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒரே நாளில் வெவ்வேறு பகுதிகளில் வீட்டை உடைத்து 110 பவுன் நகை,ரூ.2 லட்சம் பணம் கொள்ளையடித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.ஒரே நாளில் 2 வீடுகளில் பணம், நகை கொள்ளை போன சம்பவத்தால் சாயல் குடியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்