சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் பகுதிகளில் குடிமராமத்து பணிகளை கலெக்டர் ஷில்பா ஆய்வு
சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் பகுதிகளில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை கலெக்டர் ஷில்பா நேற்று ஆய்வு செய்தார்.
வாசுதேவநல்லூர்,
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா நகரம், பேய்குளம், இந்திபேரி, வீரிருப்பு, பெரியசடையநேரி, வாசுதேவநல்லூர் இனங்குளம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் குடிமராமத்து திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஷில்பா நேற்று ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, நகரம் பகுதியில் உள்ள பெரியகுளம் ரூ.17 லட்சம் மதிப்பில் புனரமைக்கும் பணிகளையும், ரூ.25 லட்சத்தில் பேய்குளம் குடிமராமத்து பணிகளையும், ரூ.30 லட்சத்தில் வீரிருப்பு குளம், ரூ.46 லட்சத்தில் பெரியசடையநேரி மற்றும் வாசுதேவநல்லூர் நகரப்பஞ்சாயத்துக்கு உட்பட்ட இனங்குளத்தில் ரூ.45 லட்சத்தில் குடிமராமத்து பணிகள் நடைபெறுவதையும் கலெக்டர் ஷில்பா பார்வையிட்டார். பின்னர் பணிகளை 40 நாட்களுக்குள் முடித்திட விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
ஆய்வின்போது செயற்பொறியாளர் ராஜா, செய்தி- மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், உதவி பொறியாளர்கள் தினேஷ், தீபக், அழகர்சாமி, தாசில்தார் அழகுராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர் அருணாதேவி உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.
மழைநீர் சேகரிப்பு மற்றும் குடிமராமத்து பணிகள் குறித்து வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் ஷில்பா விழிப்புணர்வு ஆலோசனை வழங்கினார். பின்னர் அவர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது அவர் கூறுகையில், “தேர்வுக்காக குறிப்பேடுகளில் உள்ள வினா, விடைகளை மட்டும் படிக்கக்கூடாது. பாடத்திட்ட பாடங்களோடு உலக அறிவையும், பல நூல்கள் வாயிலாக பொது அறிவையும் பெற வேண்டும். உங்களது இல்லங்களில் உள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை பாதுகாப்பாக வைத்திருப்பதுடன், மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும். தலைவர்கள் பிறந்தநாள் விழா, தாய், தந்தையர் திருமண நாள் போன்ற நல்ல நாட்களில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க வேண்டும்“ என்றார்.
பின்னர் கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் ஷில்பா பரிசு வழங்கினார்.