நெல்லை ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை நேற்று நடந்தது.
நெல்லை,
தமிழகம் முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களில் நேற்று பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. பயணிகளின் உடைமைகள் மற்றும் ரெயில் தண்டவாளங்கள், ரெயில் பெட்டிகளை போலீசார் சோதனை செய்தனர். ரெயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வசதியாகவும் இந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நேற்று காலை 7 மணிக்கு ஒத்திகை தொடங்கியது. ரெயில்வே போலீசாரும் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினரும் இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.
ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு அன்பழகன் முன்னிலையில் ரெயில்வே இன்ஸ்பெக்டர்கள் அருள்ஜெயபால் (நெல்லை), குருசாமி (விருதுநகர்), ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிரண் மற்றும் ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜூலியட், முத்தமிழ் செல்வன், கிருஷ்ணன் மற்றும் போலீசார் ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.
அவர்கள் 1, 2, 3 ஆகிய நடைமேடைகளில் மெட்டல் டிடெக்டர் கருவியின் மூலமும், மோப்ப நாயுடன் சென்று பயணிகள் உடைமைகளை சோதனை செய்தனர். பின்னர் அவர்கள் அங்கு நின்று கொண்டு இருந்த நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில், நெல்லை-தூத்துக்குடி பயணிகள் ரெயில்களில் ஏறி ஒவ்வொரு பெட்டி, பெட்டியாக சோதனை செய்தனர். தண்டவாளத்தில் வெடிகுண்டு சோதனையும் செய்யப்பட்டது. இந்த சோதனை காலை 9 மணி வரை, அதாவது 2 மணி நேரம் நடந்தது.