கோவில்பட்டி நகரசபை அலுவலகத்தை துப்புரவு பணியாளர்கள் முற்றுகை

தங்களுக்கு மாதந்தோறும் மருத்துவ பரிசோதனை முகாம் நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கோவில்பட்டி நகரசபை அலுவலகத்தை துப்புரவு பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2019-07-17 23:00 GMT
கோவில்பட்டி, 

கோவில்பட்டி நகரசபை அலுவலகத்தை லூயி துப்புரவு தொழிலாளர் நலச்சங்க தலைவர் சுடலைமணி, செயலாளர் ஜான் பீட்டர் தலைமையில் துப்புரவு பணியாளர்கள் நேற்று மதியம் முற்றுகையிட்டனர். தங்களுக்கு மாதம் ஒருமுறை மருத்துவ பரிசோதனை முகாம் நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் அவர்கள், நகரசபை ஆணையாளர் அட்சயாவிடம் கோரிக்கை மனு வழங்கினர். அந்த மனுவில், கோவில்பட்டி நகரசபை துப்புரவு பணியாளர்களுக்கு மாதந்தோறும் மருத்துவ பரிசோதனை முகாம் மற்றும் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும். குப்பைகளை பிரித்து கொடுப்பதற்கு வசதியாக துப்புரவு பணியாளர்களுக்கு தலா 5 சாக்குப்பைகளை வழங்க வேண்டும்.

துப்புரவு பணியாளர்களை அவதூறாக பேசுகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மனுவை பெற்று கொண்ட நகரசபை ஆணையாளர் அட்சயா, இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்