கலசபாக்கம் அருகே, ரூ.1 லட்சம் கேட்டு பள்ளி மாணவன் கடத்தல் - தந்தை, மகன் கைது
கலசபாக்கம் அருகே ரூ.1 லட்சம் கொடுத்த கடனை திருப்பி கேட்டு பள்ளி மாணவனை கடத்திய ஜவ்வாதுமலையை சேர்ந்த தந்தை - மகனை போலீசார் கைது செய்தனர்.
கலசபாக்கம்,
கலசபாக்கம் ஒன்றியம் கிடாம்பாளையம் கிராமம் நேருநகர் பகுதியை சேர்ந்தவர் பலராமன் (வயது 49), விவசாயி. இவர் ஜவ்வாதுமலை ஒன்றியம் கானமலை ஊராட்சிக்கு உட்பட்ட போங்கனூர் கிராமத்தை சேர்ந்த பூசி என்ற பெரியபையன் (40) என்பவரிடம் ரூ.1 லட்சம் கடனாக பெற்றுக்கொண்டு தனது நிலத்தை குத்தகைக்கு விட்டுள்ளார்.
அந்த நிலத்தில் பூசி கடந்த 3 ஆண்டுகளாக பயிர் செய்து வந்துள்ளார். அதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதனால் தான் கொடுத்த ரூ.1 லட்சத்தை பலராமனிடம் திருப்பி கேட்டுள்ளார். பலராமனால் பணம் கொடுக்க முடியவில்லை. நிலத்தை விற்றுதான் கொடுக்க முடியும் என்று கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பூசி, அவரது மகன் ஏழுமலை (24), உறவினர் ராஜகோபால் ஆகிய 3 பேரும் சேர்ந்து பலராமன் வீட்டில் இல்லாத நேரத்தில் 7-ம் வகுப்பு படிக்கும் அவரது மகன் கோபாலகிருஷ்ணனை (12) ஜவ்வாதுமலைக்கு கடத்தி சென்று விட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த பலராமன் கடலாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ஜவ்வாதுமலை போலீசார் விரைந்து சென்று பூசி வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த சிறுவனை மீட்டு பூசி மற்றும் அவரது மகன் ஏழுமலை ஆகிய 2 பேரையும் பிடித்து கடலாடி போலீசில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து கடலாடி போலீசார் வழக்குப்பதிவு ஏழுமலையையும், பூசியையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.