வங்கிகள் வழங்கும் உழவர் கடன் அட்டை திட்டம் மூலம் விவசாயிகள் பயன்பெறலாம் - கலெக்டர் சி.கதிரவன் தகவல்

வங்கிகள் வழங்கும் உழவர் கடன் அட்டை திட்டம் மூலம் விவசாயிகள் பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.

Update: 2019-07-16 22:30 GMT
ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

விவசாய பணிகளில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் நிதித்தேவைகளை உடனுக்குடன் பூர்த்திசெய்யும் நோக்கில் வங்கிகள் மூலம் உழவர் கடன் அட்டைகள் (கிசான் கிரெடிட் கார்டுகள்) வழங்கப்படுகின்றன.

இந்த அட்டையானது அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.

இந்த அட்டைகளை விவசாயிகள் பயிர் சாகுபடி செய்வதற்காகவும், கால்நடை வளர்ப்புக்காகவும் பெற்று கொள்ளலாம்.

பயிர் சாகுபடியை பொறுத்தமட்டில் பயிர் சாகுபடியின் பரப்பளவிற்கு ஏற்றவாறும், கால்நடை வளர்ப்பை பொறுத்தமட்டில் நடப்பு மூலதனத்தின் அளவிற்கும் கடன் அட்டைகள் வழங்கப்படுகின்றன.

இந்த திட்டத்தின் மூலம் விவசாயி ஒருவர் எந்தவொரு ஈட்டுறுதியும் இல்லாமல் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வரையிலும், நில ஈட்டுறுதி அடிப்படையில் ரூ.3 லட்சம் வரையிலும் பெற்றுக் கொள்ளலாம். இந்த அட்டையின் காலஅளவு 5 ஆண்டுகள் ஆகும். இந்த அட்டைகள் மூலம் கடன் பெற்று உரிய தவணை காலத்தில் கடனை திரும்ப செலுத்தும் விவசாயிகளுக்கு 4 சதவீதம் மட்டுமே சலுகை வட்டி தொகையாக வசூலிக்கப்படுகிறது.

எனவே அனைத்து விவசாயிகளும் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் நில ஆவணங்களுடன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது கூட்டுறவு வங்கிகளை அணுகி பயன் பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்