பஸ்சில் வந்தபோது, சட்டக்கல்லூரி மாணவியிடம் நகை பறித்த 2 பெண்கள் கைது

பஸ்சில் வந்தபோது சட்டக்கல்லூரி மாணவியிடம் நகை பறித்த 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2019-07-16 22:00 GMT
கோவை,

கோவை சின்னியம்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சின்னச்சாமி. இவருடைய மகள் நிஷா (வயது 20). இவர் கோவையில் உள்ள சட்டக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 3-ந் தேதி திருப்பூர் சென்றுவிட்டு கோவை திரும்பினார். சின்னியம்பாளையத்தில் அவர் பஸ்சைவிட்டு இறங்கியபோது அவர் அணிந்திருந்த 2½ பவுன் நகையை காணவில்லை.

இது குறித்த புகாரின்பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நிஷா அதே பஸ்சில் திருப்பூரில் இருந்து கோவை வந்தார். அப்போது அவருடைய இருக்கை அருகே 2 பெண்கள் இருந்தனர். கடந்த 3-ந் தேதி அவருடைய நகை காணாமல்போனபோது அதே பெண்கள்தான் நிஷா அருகில் இருந்தனர்.

இதனால் சந்தேகம் அடைந்த நிஷா, அவர்கள் 2 பேரிடமும் நகை காணாமல் போனது குறித்து கேட்டார். அதற்கு அவர்கள் பதில் கூறவில்லை. தொடர்ந்து நிஷா, அந்த பெண்களிடம் விசாரித்துக்கொண்டே இருந்தார். அப்போது அந்த பஸ் சின்னியம்பாளையம் புறக்காவல்நிலையம் அருகே நின்றது. உடனே அந்த 2 பெண்களும் பஸ்சை விட்டு கீழே இறங்க முயன்றனர்.

உடனே நிஷா சத்தம்போட்டதும், பஸ்சுக்குள் இருந்தவர்கள் அந்த 2 பெண்களை பிடித்து புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கிருந்த போலீசார் அவர்கள் 2 பேரிடம் விசாரணை செய்ததில், திருச்சி சமயபுரத்தை சேர்ந்த அலமேலு (45), அம்பிகா (27) என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், நகையை திருடவில்லை, ரூ.7 ஆயிரத்தைதான் திருடினோம் என்று கூறினார்கள்.

அவர்கள் 2 பேரும் முன்னுக்கு பின் முரணான பதிலை தெரிவித்ததால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இதையடுத்து பீளமேடு குற்றப்பிரிவு போலீசார் அந்த பெண்களிடம் விசாரணை செய்தனர். அதில் அவர் நிஷாவிடம் இருந்து 2½ பவுன் நகையை பறித்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் வேறு யாரிடமாவது நகை, பணம் திருடினார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்