பாகூர் மூலநாதர் கோவில் தேரோட்டம் கிரண்பெடி, நாராயணசாமி தொடங்கி வைத்தனர்

பாகூர் மூலநாதர் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. தேரை வடம் பிடித்து இழுத்து கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Update: 2019-07-16 00:33 GMT
பாகூர்,

பாகூரில் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் பராந்தக சோழனால் கட்டப்பட்டதாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. இங்கு கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது.

விழாவையொட்டி தினமும், சாமிக்கு சிறப்பு பூஜைகளும் இரவில் பல்வேறு வாகனங்களில் வீதி உலாவும் நடந்தது. கடந்த 13-ந் தேதி மூலநாதர் - வேதாம்பிகை அம்மன் திருக்கல்யாணம் நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது. இதிலர் கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி, தனவேலு எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். பின்னர் அவர்கள் சாமி தரிசனம் செய்தனர். கவர்னரும், முதல்-அமைச்சரும் அருகருகே இருந்தும் அவர்கள் பேசிக்கொள்ளவில்லை.

கோவிலை சுற்றியுள்ள மாட வீதிகள் வழியாக தேர் வலம் வந்தது. இதில் பாகூர் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை இழுத்தனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழு தலைவர் முத்துராமன் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்