23 ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததாக கருதப்பட்ட மீனவர் இலங்கையில் மனநல மருத்துவமனையில் இருக்கிறார் - மீட்க குடும்பத்தினர் கோரிக்கை

23 ஆண்டுகளுக்குமுன் மீன்பிடிக்க சென்று விபத்தில் இறந்ததாக கருதப்பட்ட மீனவர் தற்போது இலங்கையில் ஆஸ்பத்திரியில் மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளதால் அவரை மீட்டுக்கொண்டுவர வேண்டும் என்று குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-07-15 22:15 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் சல்லிமலை பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் பரதன்(வயது62). மீனவர்.

கடந்த 1996-ம் ஆண்டு கடலுக்கு 3 மீனவர்களுடன் மீன்பிடிக்க சென்ற இவர் படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் இறந்துவிட்டதாக கருதப்பட்டது. எங்கு தேடியும் கிடைக்காததால் குடும்பத்தினர், இவர் இறந்துவிட்டதாக கருதி அவர் தொலைந்து போன நாளை நினைவு நாளாக கடைபிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்குமுன் சமூக வலைதளம் ஒன்றில் பிச்சைக்காரர்கள் பற்றி வெளியான வீடியோ காட்சியில் மேற்கண்ட பரதன் இலங்கையில் பிச்சைக்காரராக திரிவது போன்ற காட்சியை பரதனின் குடும்பத்தினர் கண்டனர். அதில் உள்ளது பரதன் தான் என்பதை அவருடைய மகள் சரவண சுந்தரி உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் உறுதி செய்தனர்.

இந்நிலையில் 23 ஆண்டுகளுக்குபின் இறந்ததாக கருதப்பட்டவர் இலங்கையில் மனநிலை சரியில்லாதது போன்று பிச்சைக்காரர்கள் பட்டியிலில் இருப்பதை அறிந்த குடும்பத்தினர் வேதனை அடைந்தனர்.

இதனை தொடர்ந்து பரதனின் குடும்பத்தினர் அவரை மீட்டுத்தரக்கோரி கடந்த மே மாதம் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். இந்த நிலையில் பரதன் கொழும்பில் பேராதன் பகுதியில் உள்ள மருத்துவகல்லூரி மருத்துவமனையில் மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அங்குள்ளவர்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அவரை உடனடியாக மீட்டுத்தரக்கோரி பரதனின் குடும்பத்தினர் கடல்தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி தலைமையில் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டர் வீரராகவராவிடம் மனு கொடுத்தனர். பரதனுடன் சென்ற மற்ற 3 பேரின் நிலையை அறியவும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகஅரசு இதுபோன்று பாதிக்கப்படும் மீனவர்களின் குடும்பத்தினருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.250 வீதம் வழங்கி வரு வதால் அந்த உதவித்தொகையை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்