சாணார்பட்டி அருகே, பஞ்சு குடோன் தீப்பற்றி எரிந்தது
சாணார்பட்டி அருகே பஞ்சு குடோன் தீப்பற்றி எரிந்தது.
கோபால்பட்டி,
சாணார்பட்டி அருகே உள்ள கோபால்பட்டி காந்திநகரை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 60). இவர் இலவம் காய்களை வாங்கி பஞ்சை பிரித்து மூட்டைகளில் அடைத்து விற்பனை செய்து வருகிறார். இதற்காக தனது வீட்டின் அருகே இலவம் பஞ்சு குடோன் வைத்துள்ளார். அங்கு இலவம் பஞ்சு காய்கள் மற்றும் பஞ்சு மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் குடோனில் வைக்கப்பட்டிருந்த பஞ்சு மூட்டைகளில் தீப்பிடித்தது. தீ பற்றி எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பழனிச்சாமி குடும்பத்தினர், அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அது பலனளிக்கவில்லை.
இதுகுறித்து நத்தம் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.
தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்ததால் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இருப்பினும் குடோனில் வைத்திருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள இலவம் பஞ்சுகள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. தீ எப்படி பிடித்தது என்பது தெரியவில்லை. இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.