பாந்திராவில் `வாஷிங் மெஷின்' வெடித்து தீ பிடித்தது வீட்டில் தூங்கி கொண்டிருந்த 2 பேர் உயிர் தப்பினர்
பாந்திராவில் `வாஷிங் மெஷின்' வெடித்து தீ பிடித்தது. இந்த சம்பவத்தின் போது வீட்டில் தூங்கி கொண்டிருந்த 2 பேர் உயிர் தப்பினர்.
மும்பை,
மும்பை பாந்திரா மேற்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வருபவர் நேகா சோப்ரா. இவருக்கு ஸ்ரேயா என்ற மகளும், கரண் என்ற மகனும் உள்ளனர். சம்பவத்தன்று காலை இவர் யோகா வகுப்பிற்கு சென்றுவிட்டார். ஸ்ரேயா மற்றும் அவரின் பாட்டி கமல் சேகல் ஆகியோர் வீட்டில் உள்ள அறையில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது திடீரென வெடி சத்தம் கேட்டது. மேலும் வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறி கொண்டிருந்தது. இதை பார்த்த பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவர் உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது `வாஷிங் மெஷின்' தீப்பிடித்து மளமளவென எரிந்து கொண்டிருந்தது. அந்த வாஷிங்மெஷின் தான் வெடித்து தீப்பிடித்து எரிவது தெரியவந்தது. இதைப்பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின்னர் தான் வீட்டில் தூங்கி கொண்டிருந்த இருவருக்கும் இந்த சம்பவம் தெரியவந்தது. பின்னர் அவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
பழுது
இதற்கிடையே தகவலின்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீப்பிடித்த வாஷிங் மெஷினை பார்வையிட்டனர். விசாரித்ததில் 7 வருடங்களுக்கு முன்பு வாங்கிய வாஷிங் மெஷின் கடந்த சில நாட்களாக சரிவர இயங்காமல் இருந்துள்ளது.
இதனால் வாஷிங் மெஷின் நிறுவனத்தை சேர்ந்த பழுது பார்ப்பவர் பழுதை சரிசெய்து அனைத்தும் சரியாக உள்ளதாக கூறியுள்ளார். இந்தநிலையில் தான் வாஷிங் மெஷின் வெடித்து, தீ பிடித்து எரிந்தது தெரியவந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் அந்த கட்டிடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.