சிங்கமங்கலம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு
சிங்கமங்கலம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் சிங்கமங்கலம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கோட்டூர் ஒன்றியம் வெங்கத்தான்குடி ஊராட்சி சிங்கமங்கலம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றோம். எங்கள் பகுதியில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக நிலவி வருகிறது. இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே அத்தியாவசிய தேவையான குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தேவையான இடங்களில் கைப்பம்பும், கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீரும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கோரையாறு கரை ஓரத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க வேண்டும். சிங்கமங்கலம் அய்யனார் கோவில் அருகில் கோரையாற்றில் பழுதடைந்துள்ள தட்டிபாலத்தை சீரமைத்து தர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.