அரசின் கல்விக்கொள்கை பற்றி முழுமையாக தெரிந்து பேசவேண்டும் நடிகர் சூர்யாவுக்கு அமைச்சர் பதிலடி
அரசின் கல்விக்கொள்கை பற்றி முழுவதுமாக தெரிந்து கொண்டு பேச வேண்டும் என்று நடிகர் சூர்யாவுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி கொடுத்தார்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டை நிலைநாட்டியவர் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக, சட்டமன்றத்தில் நடந்த விவாதத்தின்போது, எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று, அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதன்படி அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டு, கருத்து கேட்கப்பட்டது. 69 சதவீத இடஒதுக்கீடு பாதிக்காத அளவுக்கு அரசு நல்ல முடிவு எடுக்கும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். இதுதான் அரசின் நிலைப்பாடாக உள்ளது.
அரசின் கல்விக்கொள்கையைப் பற்றி முழுவதுமாக தெரிந்து கொண்டு நடிகர் சூர்யா பேச வேண்டும். அரைகுறையாக தெரிந்து கொண்டு பேசுபவர்களுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஆங்கில வழிக்கல்வி பயிலுவதற்கு தனியார் பள்ளிகளை மாணவர்கள் நாடிச் செல்வதை தவிர்த்திடும் வகையில், அங்கன்வாடிகளிலே ஆங்கில வழிக்கல்வியை அரசு தொடங்கியது. இதனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் சார்பில் 600-க்கு மேற்பட்ட மினி சூப்பர் மார்க்கெட் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு 43 மினி சூப்பர் மார்க்கெட் ஒதுக்கப்பட்டு, அதில் 32 மினி சூப்பர் மார்க்கெட் தொடங்கப்பட்டது.
தூத்துக்குடி பசுமை பண்ணை காய்கறி அங்காடியில் காய்கறி விற்பனை தமிழக அளவில் முதலிடத்தில் இருப்பது போன்று, நெல்லை அம்மா மருந்தகமும் விற்பனையில் தமிழகத்தில் முதலிடத்தில் உள்ளது. இங்கு மருந்துகளுக்கு 15 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
கூட்டுறவு சங்கங்கள் மலிவான விலையில் தரமான பொருட்களை வழங்க வேண்டும் என்ற உன்னதமான நோக்கத்தில் செயல்படுகிறது. கூட்டுறவு சங்கங்களில் உள்ள குறைகளை அரசு ஆய்வு செய்து, உடனுக்குடன் நிவர்த்தி செய்து வருகிறது.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.