16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா வழக்கில் இன்று தீர்ப்பு கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி தப்புமா? சட்டசபையில் 18-ல் நம்பிக்கை வாக்கெடுப்பு சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவிப்பு

16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா வழக்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்படுகிறது. இந்த நிலையில் வருகிற 18-ந்தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்துள்ளார்.

Update: 2019-07-15 23:30 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் ஆளுங்கூட்டணியை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.

16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா

இதனால் 9 நாட்களாக கர்நாடக அரசியல் களத்தில் அதிரடி திருப்பங்களுக்கும், பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் பல்வேறு காட்சிகள் அரங்கேறி வருகின்றன. அதாவது, கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்-மந்திரியாக குமாரசாமியும், துணை முதல்-மந்திரியாக பரமேஸ்வரும் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், கூட்டணி அரசின் மீதான அதிருப்தி, மந்திரி பதவி கிடைக்காத விரக்தி உள்ளிட்ட காரணங்களால் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். மேலும் 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு கொடுத்து வந்துள்ள ஆதரவை வாபஸ் பெற்றுவிட்டனர். தற்போது அவர்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் கூட்டணி அரசின் பலம் சட்டசபையில் 101 ஆக குறைந்துள்ளது. அதே வேளையில் பா.ஜனதாவின் பலம் 107 ஆக அதிகரித்துள்ளது.

ஆனால் 16 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ரமேஷ்குமார் இன்னும் அங்கீகரிக்கவில்லை. இதையடுத்து, தங்களது ராஜினாமாவை அங்கீகரிக்க சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி முதலில் 10 எம்.எல்.ஏ.க்களும், அதன்பிறகு மேலும் 5 எம்.எல்.ஏ.க்களும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்க உள்ளது. ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களில் ராமலிங்கரெட்டியை தவிர மற்றவர்கள் மும்பை ஓட்டலிலும், டெல்லியிலும் முகாமிட்டுள்ளனர்.

சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்

முதல்-மந்திரி குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதால், இந்த ஆட்சி தொடர கூடாது என்றும், முதல்-மந்திரி பதவியை குமாரசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் பா.ஜனதாவினர் வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து, பதவியை ராஜினாமா செய்துள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் முயற்சியிலும், கூட்டணி ஆட்சியை காப்பாற்றவும் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கடந்த 12-ந் தேதி கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது கூட்டணி அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என்று முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்திருந்தார். இதையடுத்து, 2 நாட்கள் விடுமுறைக்கு பின்பு கர்நாடக சட்டசபை நேற்று மதியம் 12 மணியளவில் நடைபெற இருந்தது. ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என்று குமாரசாமி கூறி இருந்ததால், அதற்கான தேதியை முடிவு செய்வது குறித்து விதானசவுதாவில் சபாநாயகர் ரமேஷ்குமார் தலைமையில் சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது.

பா.ஜனதா வலியுறுத்தல்

இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி குமாரசாமி, எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா, முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், பா.ஜனதாவை சேர்ந்த கே.ஜி.போப்பையா, மாதுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கும் முன்பாகவே சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் பா.ஜனதா கட்சியை சேர்ந்த மாதுசாமி எம்.எல்.ஏ. கடிதம் ஒன்றை கொடுத்தார். அதில், கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதால் நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே (அதாவது நேற்று) நடத்த வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து, சபாநாயகர் ரமேஷ்குமார், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான தேதியை முடிவு செய்வது குறித்து 3 கட்சிகளின் தலைவர்களிடம் கருத்துகளை கேட்டார்.

அப்போது இந்த அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாலும், முதல்-மந்திரி குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தயார் என்று அறிவித்திருப்பதாலும் இன்றே (நேற்று) உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று பா.ஜனதாவினர் சபாநாயகரிடம் வலியுறுத்தினர். இதற்கு முதல்-மந்திரி குமாரசாமி, முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா ஆகியோர் சம்மதிக்கவில்லை. அதே நேரத்தில் 15 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா குறித்து சுப்ரீம் கோர்ட்டில் நாளை(இன்று) தீர்ப்பு வர இருப்பதால், தீர்ப்பு வந்த பிறகே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தலாம் என்று சபாநாயகர் ரமேஷ்குமார் கூறினார்.

18-ந் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு

இதற்கு பா.ஜனதாவினர் முதலில் சம்மதிக்கவில்லை. காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்களும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வந்த பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தலாம் என்று தெரிவித்தனர். அதே நேரத்தில் சபாநாயகர் ரமேஷ்குமார், வருகிற 18-ந் தேதி (வியாழக்கிழமை) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தலாம் என்றார். சபாநாயகரின் முடிவை இறுதியாக பா.ஜனதாவினர் ஏற்றுக் கொண்டனர்.

ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் வரை சட்டசபை கூட்டம் நடத்தக்கூடாது என்றும், அவ்வாறு கூட்டம் நடந்தால் நாங்கள் கலந்துகொள்ள மாட்டோம் என்றும் பா.ஜனதாவினர் திட்டவட்டமாக கூறியதாக தெரிகிறது. இதையடுத்து, சபாநாயகர் தலைமையில் நடந்த சட்டசபை அலுவல் ஆய்வுக்கூட்டம் நிறைவு பெற்றது. அதைத்தொடர்ந்து, மதியம் 2.30 மணியளவில் சட்டசபை கூடியது. முதல்-மந்திரி குமாரசாமி, 3 கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களும் சட்டசபைக்கு வந்தனர்.

சபாநாயகர் அறிவிப்பு

பின்னர் சட்டசபைக்கு வந்த சபாநாயகர் ரமேஷ் குமார் அவையில் பேசியதாவது:-

சட்டசபை கூட்டத்தொடர் 12-ந் தேதி கூடியதும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தயார் என்று முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்திருந்தார். அன்றைய தினம் மாலையில் சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் எனது தலைமையில் நடந்தது. இதில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் கலந்துகொண்டனர். எதிர்க்கட்சியான பா.ஜனதா கூட்டத்திற்கு வரவில்லை. எதிர்க்கட்சி இல்லாமல் அன்றைய தினம் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தேதியை முடிவு செய்ய முடியாமல் போனது. இதனால் சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் இன்று (நேற்று) நடைபெற்றது. இதில், 3 கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

இதில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தேதியை முடிவு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பா.ஜனதாவினர் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று தங்களது தரப்பு வாதங்களை கூறினார்கள். ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் நாளை (இன்று) தீர்ப்பு கூறப்படுகிறது. இதன் காரணமாகவும், சட்ட விதிமுறைகளின் படியும் நம்பிக்கை வாக்கெடுப்பை வருகிற 18-ந் தேதி நடத்துவது என்று கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் 11 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும்.

சட்டசபை ஒத்திவைப்பு

நம்பிக்கை வாக்கெடுப்பு 18-ந் தேதி நடைபெறுவதால், அதுவரை சட்டசபை கூட்டம் நடைபெறக்கூடாது என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர். இதனால் நாடாளுமன்றத்தில் பின்பற்றப்படும் விதிமுறைகளை பற்றி தெரிய விரும்பினேன். அதுபற்றி அறிந்தும் கொண்டேன். இதுபோன்ற சூழ்நிலையில் சட்டசபை கூட்டத்தை நடத்த எந்த தடையும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. ஆனால் எதிர்க்கட்சி இல்லாமல் கூட்டத்தை நடத்த முடியாது. மாநிலத்தில் தற்போது நடைபெறும் சதுரங்க ஆட்டத்தில் வெற்றி பெறுவது யார்? தோல்வி அடைவது யார்? என்பது பற்றி எனக்கு கவலையில்லை.

இந்த நேரத்தில் ஒவ்வொரு கட்சியினர் பேசும் போது சரியாக பேசுங்கள். தவறான வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள். நம்பிக்கை வாக்கெடுப்பு வருகிற 18-ந் தேதி நடைபெறுவதாலும், எதிர்க்கட்சி சட்டசபை கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோம் என்று கூறியதாலும், சட்டசபையை 18-ந் தேதிக்கே ஒத்திவைக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஓட்டல்களில் எம்.எல்.ஏ.க்கள்

இதையடுத்து, சட்டசபையில் இருந்து சபாநாயகர் வெளியே புறப்பட்டு சென்றார். முதல்-மந்திரி குமாரசாமி, எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா மற்ற எம்.எல்.ஏ.க்களும் வெளியே புறப்பட்டு சென்றனர். நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் வரை 3 கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களையும் ஓட்டல்களிலேயே தங்கவைக்க தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, 3 கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களும் அவர்கள் தங்கியிருந்த ஓட்டல்களுக்கு பஸ்களில் அழைத்து செல்லப்பட்டார்கள். இதுபோல, கர்நாடக மேல்-சபை கூட்டத்திலும் கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை பலம் இல்லை என்று கூறி பா.ஜனதாவினர் கோஷங்களை எழுப்பினார்கள்.

இதையடுத்து, மதியம் 12.30 மணிக்கு தொடங்கிய மேல்-சபை அரை மணிநேரம் ஒத்திவைக்கப்பட்டது. மதியம் 1 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் மீண்டும் பா.ஜனதாவினர் கோஷங்களை எழுப்பியதால், மேல்-சபையும் முழுவதுமாக ஒத்திவைக்கப்பட்டது.

இன்று தீர்ப்பு

நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து முதல்-மந்திரி குமாரசாமியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம்“ என்று மட்டும் கூறிவிட்டு சென்றுவிட்டார்.

இதுபற்றி சித்தராமையா கூறுகையில், ‘நம்பிக்கை வாக்கெடுப்பு 18-ந் தேதி நடைபெறும் என்று சபாநாயகர் முடிவு எடுத்துள்ளார். இதற்கு பா.ஜனதாவினர் சம்மதம் தெரிவித்துள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு கூட்டணி அரசு தயார். வாக்கெடுப்பில் கூட்டணி அரசு வெற்றி பெறும்‘ என்றார்.

சுப்ரீம் கோர்ட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) 15 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா குறித்த வழக்கில் தீர்ப்பு வர உள்ளது. இந்த தீர்ப்புக்கு பின்பே கர்நாடகத்தில் கூட்டணி அரசு தப்புமா? அல்லது கவிழுமா? என்பது தெரியவரும்.

மும்பை செல்ல திட்டம்

இந்த நிலையில் சட்டசபையில் வருகிற 18-ந்தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதால், ஆளுங்கூட்டணி கட்சியினர் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளனர். அதே வேளையில் பா.ஜனதா கட்சி கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க திரைமறைவில் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை தக்கவைத்து கொள்ள வேறுவழி இல்லாததால் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு மும்பையில் தங்கியுள்ள எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்த கூட்டணி கட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். அவர்களை சந்தித்து பேச முதல்-மந்திரி குமாரசாமி, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் கர்நாடக அரசியலில் ஏதாவது திருப்பங்கள் நிகழுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்